வதந்திகளை நம்ப வேண்டாம்: புழல் ஏரியை ஆய்வு செய்த பின் அமைச்சர் துரைமுருகன் பேட்டி

புழல் ஏரியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் துரைமுருகன்
புழல் உள்ளிட்ட அனைத்து ஏரிகளும் பாதுகாப்பாக உள்ளன. சரியான அளவில் நீர்மட்டத்தை அதிகாரிகள் கையாண்டதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் ஏரிகளில் புழல் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர்இருப்பு 3012 மில்லியன் கனஅடியாக உள்ளது. ஏரிக்கு 850 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 100 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. 159 கனஅடி நீர் குடிநீருக்காக திறக்கப்பட்டு வருகிறது.
அண்மையில் பெய்த கனமழையால் புழல் ஏரி முழு கொள்ளளவு எட்டியதால் கரையின் சுவர்கள் மேல் இருந்து தண்ணீர் ததும்பி வெளியேறியது. ஏரியின் கரையில் காவல் துறையினரின் கண்காணிப்பு கட்டடம் அருகே தடுப்பு சுவர் இடிந்து சேதமானது. இதனால் புழல் ஏரி உடையும் அபாயம் என சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
இதனையடுத்து புழல் ஏரியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டி கரைகளில் தண்ணீர் வழிந்தோடிய நிலையில் ஏரியின் உறுதிதன்மை குறித்து அமைச்சர் துரைமுருகன் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், புழல் உள்ளிட்ட அனைத்து ஏரிகளும் பாதுகாப்பாக உள்ளதாகவும், சரியான அளவில் நீர்மட்டத்தை கையாண்டதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றார். புழல் ஏரியில் விரிசல் ஏற்பட்டது போல செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்ததாகவும், 7அடி உயர்த்திற்கு மேலே ஏற்பட்டுள்ள உடைப்பிற்கும், நீருக்கும் சம்பந்தமில்லை என்றும் சரியான அளவில் நீர்மட்டத்தை கையாண்டதால் மக்களுக்கு பாதிப்பில்லை என்றும், புழல் உள்ளிட்ட அனைத்து ஏரிகளும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்தார்.
47 ஆண்டுகளுக்கு பிறகு பெய்துள்ள மிகப் பெரிய மழை என்றும், புயலிலும் எந்த அணையும் பாதிக்காமல் அதிகாரிகள் பாதுகாத்திருப்பதாக தெரிவித்தார். கட்டுங்கடங்காத வகையில் ஏரிகளுக்கு நீர்வரத்து வந்ததாகவும், எப்போதும் 1.5 அடி உயரம் குறைவாக நீரை தேக்கி வைக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
அதிக ஏரிகளை கொண்டது ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டம் என்றும் தற்போது அனைத்தும் நிரம்பி வழிவதாகவும், 60 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட ஏரிகள் என்றும், கரைகள், மதகுகள் அனைத்தும் முழுவதுமாக சீர் செய்யப்படும் என்றார்.
புழல் ஏரியில் புயல் காற்றின் போது கடல் அலை போல தண்ணீரில் அலைகளில் சீற்றம் ஏற்பட்டதாக தெரிவித்தார். ராமஞ்சேரி - திருத்தண்டலம் ஏரிகளை இணைத்தால் அதிகளவில் தண்ணீரை தேக்கி வைக்க முடியும் என்றும், அங்குள்ள விவசாயிகளை சமரசப்படுத்தி புதிய நீர்தேக்கம் அமைப்பதற்கான திட்டம் இருப்பதாக அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
ஒவ்வோர் ஆண்டும் 10 தடுப்பணைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்தார். கொசஸ்தலை, ஆரணியாறு இரண்டும் தமிழ்நாட்டிற்கு தலைவலி என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu