தற்கொலை செய்து கொண்ட கோவை டி.ஐ.ஜி. விஜயகுமார் உடல் சொந்த ஊரில் தகனம்

தற்கொலை செய்து கொண்ட கோவை டி.ஐ.ஜி. விஜயகுமார் உடல் சொந்த ஊரில் தகனம்
X

டி.ஐ.ஜி., விஜயகுமார் இறுதி ஊர்வலத்தில் அவரது உடலை சுமந்து வந்த டிஜிபி சங்கர்ஜிவால் மற்றும் கோவை ஐ.ஜி. சுதாகர்.

தற்கொலை செய்து கொண்ட கோவை டி.ஐ.ஜி., விஜய குமார் உடல் சொந்த ஊரான தேனியில் தகனம் செய்யப்பட்டது.

கோவையில் நடைபயிற்சி முடித்து வந்ததும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட டி.ஐ.ஜி., விஜயகுமாரின் சொந்த ஊர் தேனி மாவட்டம், போடி அணைக்கரைப்பட்டி கிராமம் ஆகும். இவரது தந்தை செல்லையா வி.ஏ.ஓ.,வாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாயார் ராசாத்தி ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

விஜயக்குமார் தனது பள்ளிப்படிப்பை தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முடித்தார். தற்போது இவரது குடும்பம் தேனி ரத்தினம் நகரில் வசிக்கிறது. மிகவும் சிறப்பான நேர்மையான அதிகாரி என பெயர் பெற்றவர். போலீஸ் துறையிலும், பொதுமக்கள் மத்தியிலும் சிறந்த அதிகாரி என பெயர் பெற்றவர். சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி.,யாக இருந்த போது, நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கினை மிகவும் நிதானமாகவும், தெளிவாகவும், துல்லியமாகவும் கையாண்டார். மொத்தத்தில் இவர் மக்களிடம் காட்டிய அன்பும், நேர்மையும் இவரை ஹீரோவாகவே நினைக்க வைத்தது. அந்த அளவுக்கு நல்ல பெயர் வாங்கிய ஒரு அதிகாரி தற்கொலை செய்து கொண்டது, தமிழகத்தை உலுக்கினாலும், இந்த சோகம் தேனி மாவட்ட மக்களை புரட்டிப்போட்டு விட்டது. தகவல் அறிந்து வருத்தப்படாத, நிலைகுலையாத, அதிர்ச்சி அடையாதவர்கள் யாருமே இல்லை.

இவரது உடல் இன்று மாலை தேனியில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அமைச்சர் ஐ.பெரியசாமி, டி.ஜி.பி. சங்கர்ஜிவால், கோவை, திருச்சி, மதுரை மண்டல ஐ.ஜி.,க்கள், திண்டுக்கல் டி.ஐ.ஜி., தேனி எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே, மற்றும் திண்டுக்கல் எஸ்.பி., பாஸ்கரன் உட்பட உயர் போலீஸ் அதிகாரிகள், தேனி மாவட்ட அதிகாரிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மாலை 5 மணிக்கு இறுதி ஊர்வலம் ரத்தினம் நகரில் இருந்து தேனி மின்தகன மேடையை நோக்கி புறப்பட்டது.


டிஜிபி சங்கர்ஜிவால், கோவை ஐ.ஜி., சுதாகர் ஆகியோர் அவரது உடலை சுமந்து வந்து அலங்கார ரதத்தில் ஏற்றினர். பின்னர் போலீஸ் அதிகாரிகள் சுடுகாடு வரை 4 கி.மீ., துாரம் நடந்து சென்றனர். வழியெங்கும் பல இடங்களில் நின்ற மக்கள் இறுதி ஊர்வலத்தில் அவரது உடலை சுமந்து வந்த அலங்கார தேரினை வணங்கி, தங்களது மதிப்பிற்குரிய அதிகாரிக்கு கண்ணீருடன் பிரியா விடை கொடுத்தனர். சுடுகாட்டில் போலீஸ் துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டு பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

Tags

Next Story