சிவ்தாஸ் மீனா தமிழகத்தின் 49-வது தலைமை செயலாளராக நியமனம்
தமிழகத்தின் 49வது தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டு உள்ளார்.
2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதையடுத்து, மே 7-ம் தேதி தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அன்றே மாநில தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் மாற்றம் செய்யப்பட்டு புதிய தலைமை செயலாளராக வெ.இறையன்பு நியமிக்கப்பட்டார்.
இரண்டு ஆண்டுகள் வெ.இறையன்பு தலைமைச் செயலராகப் பணியாற்றிய நிலையில் நாளை (வெள்ளிக்கிழமை) ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு பிறப்பித்து உள்ளார்.
சிவ்தாஸ் மீனா தமிழ்நாட்டின் 49வது தலைமைச்செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் புதிய தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். 1964 ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி பிறந்த இவர் ஜெய்ப்பூரில் உள்ள மாளவியா பொறியியல் கல்லூரியில் சிவில் என்ஜினீயரிங் படித்தார்.
அதன் பின்னர் ஜப்பான் நாட்டு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வுகளில் முதுகலை பட்டம் பெற்றார். 1989ம் ஆண்டு இந்திய குடிமைப்பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழக கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.
காஞ்சிபுரத்தில் உதவி கலெக்டராக பணியை தொடங்கிய அவர் தற்போதைய தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உதவி கலெக்டர் வேலூரில் கூடுதல் கலெக்டர் பின்னர் அம்மாவட்ட கலெக்டர் என பதவி வகித்தார். இவர் ராஜஸ்தானி, தமிழ், ஆங்கிலம், இந்தி, ஜப்பானிய மொழிகளில் பேச மற்றும் எழுதும் திறன் படைத்தவர் ஆவார்.
தற்போது தமிழக அரசின் நகராட்சி நிர்வாக துறை கூடுதல் தலைமை செயலாளராக இருந்து வந்த இவர் ஏற்கனவே போக்குவரத்து துறை, ஊரக வளர்ச்சி துறை, உணவு மற்றும் கூட்டுறவு துறை என பல துறைகளில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி உள்ளார்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அவரது 4 தனிச்செயலாளர்களில் ஒருவராகவும் சிவ்தாஸ் மீனா இருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu