புதுச்சத்திரம் பகுதியில் நீட்டிக்கப்பட்ட டவுன் பஸ் வசதி : எம்.பி. துவக்கம்

புதுச்சத்திரம் பகுதியில் நீட்டிக்கப்பட்ட    டவுன் பஸ் வசதி : எம்.பி. துவக்கம்
X

புதுச்சத்திரம் பகுதியில் நீட்டிக்கப்பட்ட டவுன் பஸ் வசதியை, ராஜேஷ்குமார், எம்.பி., துவக்கி வைத்தார். அருகில் கலெக்டர் உமா, எம்.பி., மாதேஸ்வரன், எம்எல்ஏ., ராமலிங்கம் ஆகியோர்.

புதுச்சத்திரம் பகுதியில் நீட்டிக்கப்பட்ட டவுன் பஸ் வசதியை, ராஜேஷ்குமார், எம்.பி., துவக்கி வைத்தார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், ஏளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 புதிய நீட்டிக்கப்பட்ட வழித்தடங்களில் டவுன் பஸ் சேவை துவக்க விழா நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார், எம்.பி., விழாவில் கலந்துகொண்டு நீட்டிக்கப்பட்ட வழித்திடங்களில் பஸ் வசதியை துவக்கிவைத்துப் பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு சாதாரண கட்டண பஸ்களில், மகளிர் விடியல் பயணத்திட்டம் தொடங்கப்பட்டு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மகளிருக்கு பஸ்களில் கட்டணமில்லா இலவச விடியல் பயண திட்டத்தால் பணிக்கு செல்லும் மகளிர் மற்றும் சுய தொழில் புரியும் மகளிரின் பயண செலவை மிச்சப்படுத்தி அவர்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்தி உள்ளார். இதன் மூலம் மாதந்தோறும் மகளிர் பயண செலவு தொகை சுமார் ரூ. 800 வரை மிச்சமாகிறது. இவ்வாறு தமிழக முதல்வர் ஏழை, எளிய மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் வழங்கி, அவர்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்தி வருகின்றார். இத்தகைய சிறப்பு வாய்ந்த திட்டங்கள் வேறு எந்த ஒரு மாநிலத்திலும் செயல்படுத்தப்படவில்லை. புதுச்சத்திரம் பகுதியில் பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்களின் போக்குவரத்து வசதியை எளிமையாக்கும் வகையில், அரசு போக்குவரத்து கழகம் சார்பில், டவுன் பஸ்கள் புதிய வழித்தட நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கூறினார்.

திருச்செங்கோட்டிலிருந்து பெரியமணலி வந்து செல்லும் தடம் எண்: டி14 டவுன் பஸ்ஸை, ஏளூர் ஆரம்ப சுகாதார நிலையம் வரையிலும், ராசிபுரத்திலிருந்து ஏளூர் வரும் தடம் எண்: ஆர்52சி டவுன் பஸ்ஸை புதுப்பட்டி காலனி வரையிலும், என 2 புதிய வழித்தடங்களில் டவுன் பஸ் சேவையை நீட்டிப்பு செய்து, பஸ்களை ராஜேஷ்குமார், எம்.பி., கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Next Story