வாழவந்தி மாரியம்மன் கோயில் திருவிழா 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்

வாழவந்தி மாரியம்மன் கோயில் திருவிழா 1,000க்கும்    மேற்பட்ட பக்தர்கள் தீ குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்
X

வாழவந்தி மாரியம்மன் கோயில் திருவிழாவில், பக்தர் ஒருவர், கையில் குழந்தையுடன் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்.

வாழவந்தி மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவில் 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ குண்டும் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திகடன் செலுத்தினர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம், எஸ்.வாழவந்தியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும், தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தேர்த்திருவிழா, கடந்த ஏப். 29ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. கடந்த 5ம் தேதி முதல், தினசரி இரவு 7 மணிக்கு சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நேற்று முன்தினம் இரவு, 7 மணிக்கு வடிசோறு வைத்து அம்மனுக்கு படையல் வைக்கப்பட்டது. நேற்று அதிகாலை, 3 மணிக்கு, மாவிளக்கு பூஜையும், தீ குண்டம் அமைக்கும் பூஜையும் நடந்தது. அதையடுத்து, மதியம், 1 மணிக்கு, பாலப்பட்டி கொமராபாளையம் காவிரி ஆற்றுக்கு சென்ற, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி, 5. கி.மீ., தூரம் நடந்து வந்து, கோயில் முன் ஏற்படுத்தப்பட்டிருந்த தீ குண்டத்தில் வரிசையாக இறங்கி, அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இன்று (மே 13) காலை 6 மணிக்கு பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5 மணிக்கு, சுவாமி தேரோட்டம் நடைபெறும். சுமார் 18 கிராமங்களைச் சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுப்பார்கள். நாளை (மே 14) மாலை 4 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

Next Story