நாமக்கல் கொமதேக எம்.பி., மாதேஸ்வரன் ராஜினாமா செய்ய வேண்டும்: போஸ்டரால் பரபரப்பு

நாமக்கல் லோக்சபா எம்.பி., மாதேஸ்வரன் ராஜினாமா செய்யக்கோரி, நாமக்கல்லில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்.
நாமக்கல்,
வக்பு போர்டு சம்மந்தமாக பார்லியில் மசோதா தாக்கல் செய்தபோது, அதை எதிர்த்து ஓட்டுப் போடாததால், நாமக்கல் கொமதேக எம்.பி., மாதேஸ்வரன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என நாமக்கல் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் திமுக கூட்டணியில், கொமதேவிற்கு ஒரு சீட், நாக்கல் லோக்சபா தொகுதி ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நாமக்கல் லோக்சபா வேட்பாளராக, நாமக்கல் தெற்கு மாவட்ட கொமதேக செயலாளர் மாதேஸ்வரன், திமுகவின் உதயசூரயின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்த நிலையில், தற்போது நாமக்கல் நகரம் முழுவதும் காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு சார்பில் ஒரு கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், சமீபத்தில் நடைபெற்ற பார்லி கூட்டத்தொடரில், வக்பு சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யும் போது, அதனை எதிர்த்து ஓட்டுப்போடாமல், கூட்டத்தொடரில் பங்கேற்காமல், முஸ்லிம்களுக்கு துரோகம் செய்துவிட்டார். அவர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும், தி.மு.க., கூட்டணியில் இருந்து கொண்டு, வக்பு வாரிய சட்ட திருத்தத்தை ஆதரிக்கும் போக்கில், கொ.ம.தே.க., எம்.பி., மாதேஸ்வரன் செயல்பட்டதாகவும் கூறி, நாமக்கல் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டள்ள இந்த கண்டன போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, மாதேஸ்வரன், எம்.பி., கூறியதாவது:
லோக்சபாவில் வக்பு வாரிய மசோதா தாக்கல் ஆன அன்று, எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் என்னால் பார்லி கூட்டத்தொடரில் கலந்து கொள்ளமுடியவில்லை. அதற்கு இப்படி ஒரு தரக்குறைவான விமர்சனம் வந்தால் நான் என்ன செய்வது. எனக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தை டில்லியில் இருந்த அனைவரும் ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு உண்மை தெயும். ஒரு சிலர் எனக்கு எதிராக பிரச்சினையை கிளப்புகின்றனர். யாரோ ஒருவர் செய்வதற்காக அனைவரையும் சங்கடப்படுத்தவேண்டாம். வரும், 13ம் தேதி நாமக்கல்லில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என, அனைத்து முஸ்லிம் ஜாமத்துகளும் என்னை அழைத்துள்ளனர். நானும் கலந்துகொள்ள சம்மதித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu