ப.வேலூர் அருகே மனைவியை வெட்டிக்கொலை செய்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கைது

ப.வேலூர் அருகே மனைவியை வெட்டிக்கொலை செய்த    இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கைது
X

பைல் படம் 

பரமத்திவேலூர் அருகே, குடும்பப்பிரச்சினை காரனமாக, மனைவியை வெட்டிக்கொலை செய்த, இந்து முன்னணி நாமக்கல் மாவட்ட செயலாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் அருகில் உள்ள பொத்தனூரைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இவர் இந்து முன்னணி மாவட்ட செயலாளராக உள்ளார். இவருக்கு கீதா என்ற மனைவி, இரு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர்கள் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்த வந்து பார்த்தபோது கீதாவும் அவரது கணவர் ஜெகதீசனும் வெட்டுக்காயங்களுடன் கிடந்துள்ளனர். அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர், இருவரையும் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். அங்கு கீதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஜெகதீசனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இச் சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் தலைமையில் பரமத்தி வேலூர் போலீஸார் ஜெகதீசனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது மனைவியை அடையாளம் தெரியாத மர்மநபர்கள் வெட்டிக் கொலை செய்ய முயன்றனர். தடுக்க முற்பட்டபோது எனக்கும் வெட்டுக்காயம் விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணயில், ஜெகதீசன் தனது மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடுவதாக போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஜெகதீசனிடம் போலீசார் மேலும் தீவிரமாக விசாரணை நடத்தியதில் அவர், குடும்பப்பிரச்சினை மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையொட்டி போலீசார் ஜெகதீசன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் ப.வேலூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story