தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலைக்கல்லூரிகளில் சேர்க்கை பெற நாமக்கல்லில் உதவி மையம் துவக்கம்

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலைக்கல்லூரிகளில்    சேர்க்கை பெற நாமக்கல்லில் உதவி மையம் துவக்கம்
X

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் துவக்கப்பட்டுள்ள, மாணவர் சேர்க்கை மையத்தில், கல்லூரி முதல்வர் (பொ) ராஜேஸ்வரி மாணவர்களுக்கு விண்ணப்ப படிவங்களை வழங்கினார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவ மாணவியர் சேர்க்கைக்கான உதவி மையம், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் துவக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்,

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் 2025-26 ஆம் கல்வியாண்டு இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவ மாணவியர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான உதவி மையம் வருகிற 27ம் தேதி வரை நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் செயல்படும். விண்ணப்பிக்க விரும்பும் மாணவ மாணவியர் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, இமெயில் முகவரி, செல்போன் எண், ஆகியவற்றுடன் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கல்லூரி வளாகத்தில் இயங்கும் சேவை மையத்தில் தங்களது சேர்க்கை விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.

பொது பிரிவினர், பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் வகுப்பினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 48, பதிவுக் கட்டணம் ரூ. 2 என மொத்தம் ரூ. 50 செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கு பதிவு கட்டணமாக ரூ. 2 செலுத்தினால் போதும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் கிரிடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், இளநிலை கலை பிரிவில் துறைவாரியாக தமிழ், ஆங்கிலம், பொருளியல் (தமிழ் மற்றும் ஆங்கில வழி), வணிகவியல் (ஆங்கில வழி மட்டும்), வணிக நிர்வாகவியல் (ஆங்கில வழி மட்டும்) மற்றும் வரலாறு (ஆங்கில வழி) தலா 60 இடங்கள், அறிவியல் பிரிவில் கணிதம் (தமிழ் மற்றும் ஆங்கில வழி), இயற்பியல் (தமிழ் மற்றும் ஆங்கில வழி), வேதியியல் (தமிழ் மற்றும் ஆங்கில வழி), தாவரவியல் (தமிழ் மற்றும் ஆங்கில வழி), விலங்கியல் (தமிழ் மற்றும் ஆங்கில வழி), புவியியல் (தமிழ் மற்றும் ஆங்கில வழி) தலா 40 இடங்கள், புள்ளியியல் (ஆங்கில வழி மட்டும்) 24 இடங்கள் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் 30 இடங்கள் உள்ளன. இரண்டாவது ஷிப்டில் தலா 60 இடங்கள் என மொத்தம் 1074 இடங்களுக்கு மாணவ மாணவியர் விண்ணப்பிக்கலாம்.

இவ்விடங்கள் அனைத்தும் மாணவ மாணவியர் பிளஸ் டூ வகுப்பில் அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், அரசின் மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டுதலின்படியும் கவுன்சலிங் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். கல்லூரி குறியீட்டு எண் 1031004 ஐ பயன்படுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கைக்கான தகவல்களை பெற 04286-266313 என்ற தொலைபேசி நம்பரில் தொடர்புகொள்ளலாம் என கல்லூரி முதல்வர் (பொ) ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Next Story