வளர்ச்சி திட்டப்பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்கவேண்டும் : கண்காணிப்பு அலுவலர் அறிவுரை

வளர்ச்சி திட்டப்பணிகளை குறித்த காலத்திற்குள்    முடிக்கவேண்டும் : கண்காணிப்பு அலுவலர் அறிவுரை
X

நாமக்கல் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆசியா மரியம் பேசினார், அருகில் கலெக்டர் உமா 

மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை குறித்த காலத்தில் முடிக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

நாமக்கல்,

நாமக்கல் கலெக்டர் ஆபீசில், மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா முன்னிலை வகித்தார், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சிறுபான்மையினர் நலத்துறை கமிஷனருமான ஆசியா மரியம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:

அரசு அதிகாரிகள் பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடியாக பரிசீலனை செய்து, கால தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு திட்டங்கள் பயனாளிகளுக்கு சென்றடைகிறதா என்பது குறித்து, துறை அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நேரடியாக சென்று முறையாக கள ஆய்வு செய்ய வேண்டும். துறை அலுவலர்கள், தாங்கள் மேற்கொள்ளும் வளர்ச்சித் திட்ட பணிகளை, குறித்த காலத்திற்குள் கால தாமதமின்றி முடிக்க வேண்டும். நீண்ட காலமாக தாமதம் ஏற்பட்டால், உடனடியாக கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் பணி முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார். மேலும், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், கனவு இல்லம், தூய்மை பாரத இயக்கம், நான் முதல்வன் திட்டம், முதல்வரின் காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தார். டிஆர்டிஓ திட்ட இயக்குனர் வடிவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு, தனி டி.ஆர்.ஓ., சரவணன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Next Story