நாமக்கல் மாவட்ட அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம்: கலெக்டர்

நாமக்கல்,
இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி (1,115 இடங்கள்), நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி (1,074 இடங்கள்), நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரி (1,072 இடங்கள்), குமாரபாளையம் அரசு கலை, அறிவியல் கல்லூரி (470 இடங்கள்), சேந்தமங்கலம் அரசு கலை, அறிவியல் கல்லூரி (260 இடங்கள்) ஆகியவை உள்ளன. தற்போது அனைத்து அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு, அரசு உதவிபெறும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்குப் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் மூலம் மாதம்தோறும் ரூ. 1,000 வழங்கப்படுகிறது. நான் முதல்வன் திட்டம் மூலம் வேலைவாய்ப்பிற்கான பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், அரசால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகைகள், இலவச பஸ் வசதிகளும் உள்ளன.
2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான பி.ஏ., பி.எஸ்சி, பி.காம் உள்ளிட்ட இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் வெப்சைட்டில் மே 27ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். தாமாக வெப்சைட் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டணமாக ஒரு மாணவருக்கு ரூ. 48, பதிவுக் கட்டணமாக ரூ. 2 வசூலிக்கப்படுகிறது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை.
மாணவர்கள் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் செயல்படும் உதவி மையத்தை 044-24343106, 24342911 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu