காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்

காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்
X

குமாரபாளையம் போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.

குமாரபாளையம் போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.

சாலை பாதுகாப்பு வார விழா ஜன 17 வரை நடைபெறவுள்ளது. மாநிலம் முழுதும் போலீசார் இது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதில் ஒரு கட்டமாக குமாரபாளையம் போலீசார் சார்பில் இன்ஸ்பெக்டர் ரவி, மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் சேலம், கோவை புறவழிச்சாலையில் அருவங்காடு பிரிவு, மஞ்சுபாளையம் பிரிவு, எஸ்.எஸ்.எம்.பொறியியல் கல்லூரி பகுதி ஆகிய இடங்களில் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. ஹெல்மெட் அணிந்து டூவீலர் ஓட்ட வேண்டும், மது போதையில் வாகனம் ஓட்டக்கூடாது, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டக்கூடாது, என்பது உள்ளிட்ட பல தகவல்கள் பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. இது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன. எஸ்.ஐ.மலர்விழி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சாலை விதிகள் குறித்து இன்ஸ்பெக்டர் ரவி கூறியதாவது:சாலை விபத்துக்கள் நமது சமுதாயத்திற்கும், காவல்துறைக்கும், சட்டத்துக்கும் ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.தினந்தோறும் செய்தித்தாள்கள் மூலமாகவும், தொலைக்காட்சிகள் மூலமாகவும் சாலைவிபத்துகளைப் பற்றிய செய்திகளை நாம் மிகுதியாக அறிகிறோம்.இக்காலகட்டத்தில் மிகுதியான சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. சாலை விதிகளை நாம் மதிக்காமல் நடப்பது இதற்கெல்லாம் காரணம் ஆகும்.

சாலையில் விபத்துகள் நிகழாத வண்ணம் தடுப்பதற்காக, போக்குவரத்து காவல்துறையினர் பணி செய்கின்றனர். அதற்காக மக்கள் பின்பற்ற வேண்டிய சில சாலை விதிகளை அரசு வரையறுத்துள்ளது. அறிவிப்புப் பலகைகள் மூலமாகவும், விளம்பரங்கள் மூலமாகவும், ஓட்டுனர்பயிற்சி பெறும்போதும் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்படுகிறது.சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.

சாலையில் பயணம் செய்வோர் அனைவரும் அடிப்படையான சாலை விதிகள் அனைத்தையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.நடைமேடையைப் பயன்படுத்துதல், நகரப்பகுதிகளில் சாலையைக் கடக்க சுரங்க நடைபாதைகள் பயன்படுத்துதல், வெள்ளைக் கோடுகள் போடப்பட்ட இடத்தில் சாலையைக் கடத்தல், வாகன ஓட்டிகள் முறையான இடங்களில் வாகனங்களை நிறுத்துதல் உள்ளிட்ட அடிப்படை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

சிவப்பு வண்ண விளக்கு" நில்" என்ற கட்டளையையும், மஞ்சள் வண்ண விளக்கு, தயாராக இரு என்ற கட்டளையையும், பச்சை வண்ண விளக்கு"புறப்படு" என்ற கட்டளையையும் நமக்குத் தருகிறது. அதைச் சரியாகப் பின்பற்ற வேண்டும். போக்குவரத்துக் காவல் துறையினரின் கட்டளையை மீறி நான் செல்லக்கூடாது. வாகனங்களில் அதிவேகம் இருக்கக் கூடாது. சாலையில் அந்தந்த வாகனங்களுக்கு உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டக் கூடாது. நெடுஞ்சாலைக ளில் பயணிக்கும்போது ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்த முயற்சி செய்யக்கூடாது.

இருசக்கர வாகனங்களில் இருவருக்குமேல் பயணிக்கக் கூடாது.வாகன ஓட்டிகள் உடல்நிலை மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கும் போது கண்டிப்பாக வாகனம் ஓட்டக்கூடாது.மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுதல் சட்டப்படி குற்றமாகும்.பள்ளிகள்,மருத்துவமனை,முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களுக்கு அருகில் அதிகமான ஒலி அளவில் ஒலிப்பானை ஒலிக்கக் கூடாது.

சாலைவிதிகளை மதிப்போம் விலைமதிப்பில்லாத உயிர்களைக் காப்போம்" என்பதை அனைவரும் மனதிற்கொண்டு சாலை விதிகளை கடைபிடித்து,சாலை பாதுகாப்பை உறுதி செய்வோம். சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை உணர்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.



Tags

Next Story