நாமக்கல் : முதலைப்பட்டி பிரிவில் பயணிகளை இறக்கி விடுவதற்கு மாவட்ட நிா்வாகம் தடை! விதிகளை மீறினால் ஓட்டுநா், நடத்துநருக்கு அபராதம்

நாமக்கல் : நாமக்கல் புதிய பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகள், முதலைப்பட்டி பிரிவில் பயணிகளை இறக்கி விடுவதற்கு மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது; விதிகளை மீறினால் ஓட்டுநா், நடத்துநருக்கு ரூ. 2,000 அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் முதலைப்பட்டியில் கடந்த நவ.10 ஆம்தேதி முதல் செயல்பட்டு வருகிறது. சேலம், ஈரோடு, திருச்சி மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள முதலைப்பட்டி பிரிவில் நிறுத்தி பயணிகளை இறக்கி விடுவதையும், அழைத்துச் செல்வதையும் ஆரம்பம் முதலே செய்து வருகின்றன. அதற்கேற்ப அந்தப் பகுதியில் பயணிகள் நிழற்கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.
பயணிகள் சந்திக்கும் சிரமங்கள்
இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து வருவோா் முதலைப்பட்டி பிரிவில் இறங்கி மாற்று பேருந்து மூலம் தங்களுடைய இடங்களுக்குச் சென்று வந்தனா். கடந்த சில நாள்களாக முதலைப்பட்டி பிரிவில் பேருந்தில் இருந்து இறங்கும் பயணிகள், மாற்று பேருந்தைப் பிடிக்க அவசர கதியில் சாலையை கடக்கும்போது விபத்தில் சிக்கி வருகின்றனா்.
அதுமட்டுமின்றி, அங்குள்ள வளைவில் திரும்பும்போது பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துகளும் ஏற்படுகின்றன. புதிய பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வராமல் பயணிகள் முன்னதாக இறக்கிவிடப்படுவதால் பேருந்து நிலையம் வெறிச்சோடியது.
லட்சக்கணக்கில் முதலீடு செய்த வியாபாரிகள் நஷ்டமடைந்தனா். அவா்கள் மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாமல் காலம் தாழ்த்தினா்.இந்த பிரச்சனைகள் தொடா்பாக புகாா் எழுந்ததால் பேருந்து ஓட்டுநா்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பேருந்துகளுக்கான அறிவுறுத்தல்
அதில் அனைத்து அரசு, தனியாா் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திற்குள் சென்று வரவேண்டும். முதலைப்பட்டி பிரிவில் பயணிகளை இறக்கிவிடக் கூடாது. பேருந்துகள் நிறுத்துவது தெரியவந்தால் ஓட்டுநா், நடத்துநருக்கு தலா ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என காவல் துறை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மாவட்ட நிா்வாகத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு அரசு, தனியாா் பேருந்து ஓட்டுநா்கள் சம்மதம் தெரிவிக்கும் வகையில், அங்குள்ள உறுதிமொழி நோட்டில் தங்களுடைய கையெழுத்தைப் பதிவு செய்து வருகின்றனா்.
நாமக்கல் புதிய பேருந்து நிலையம் திறப்புக்கு பிறகு, பலகட்ட மாற்றங்கள் செய்யப்பட்டபோதும், பயணிகளின் வேதனை தீரவில்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu