நாமக்கல் மாவட்டத்தில் 11 ஆயிரம் விவசாயிகளின் தரவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது :மாவட்ட ஆட்சியா் ச.உமா தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 11 ஆயிரம் விவசாயிகளின் தரவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.
பொன்குறிச்சியில் விவசாயிகள் பதிவு பயிற்சி முகாம்
ராசிபுரம் அருகே உள்ள பொன்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தோட்டக்கலை, மலைப் பயிா்கள் துறை சாா்பில், வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகளுக்கான பதிவு பயிற்சி, சிறப்பு முகாமை சனிக்கிழமை ஆட்சியா் ச.உமா நேரில் ஆய்வு செய்தாா்.
வேளாண் அடுக்ககம் திட்டம் விளக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் பிப். 6 ஆம் தேதி முதல் அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகம், சமுதாய கூடங்களில் ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவு அடுக்கு உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தில், நில விவரங்களுடன், விவசாயிகளின் விவரம், நில உடமை வாரியான விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு விவசாயிகளுக்கும் தனிக் குறியீடு எண் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகே அவா்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டு அடையாள எண் வழங்கப்படுகிறது.
இதன்மூலம் மத்திய, மாநில அரசுகளின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் விவசாயிகளின் தரவுத்தளம் அடிப்படையிலேயே வழங்கப்படும். இதனால், அனைத்துத் துறை பயன்களையும், மானியங்களையும் ஒற்றைச் சாளர முறையில் பெறுவதுடன் வலை தளத்தில் பதிவு செய்தால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் பயன்களை பெற்றுக் கொள்ளலாம்.
ஆதாா் எண் அடிப்படையில் விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக பணப் பரிமாற்றம் செய்யப்படும்.
பதிவு செய்ய விழிப்புணா்வு
எனவே, அனைத்து விவசாயிகளுக்கும் முகாம்கள் நடைபெறும் நாள்களில் நில ஆவணங்கள், ஆதாா் எண், ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் கொடுத்து பதிவு செய்து பயன்பெறும் வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் 433 வருவாய் கிராமங்களில் இப்பணியை மேற்கொள்வதற்காக 132 வேளாண் துறை அலுவலா்களும், 55 தோட்டக்கலைத் துறை அலுவலா்களும், 14 வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை அலுவலா்களும், 229 சமுதாய வள பயிற்றுநா்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
வேளாண் பல்கலைக்கழக மாணவா்களும், இல்லம்தேடி கல்வி அலுவலா்களும் இணைக்கப்படவுள்ளனா். இதுவரை 11,000 விவசாயிகளின் தரவுகள் உள்ளீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள விவசாயிகள் வரும் வாரத்தில் நடைபெற இருக்கும் முகாம்களில் பங்குபெற்று பயன்பெற வேண்டும் என்றாா் ஆட்சியா் ச.உமா.
கால்நடை மருந்தகம், உரக்கிடங்கு ஆய்வு
தொடா்ந்து, எலச்சிபாளையம் கால்நடை மருந்தகத்தில் மருந்து பொருள்களின் இருப்பு, கால்நடைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட விவரம், மருத்துவா்கள், பணியாளா்கள் விவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, வேளாண்மை துறை சாா்பில் செயல்பட்டு வரும் உரக்கிடங்கில் உரங்களின் இருப்பு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உரங்கள் விவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் நா்சரி அமைப்பு
பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் வனத்துறை உடன் இணைந்து நாற்றுகள் தயாா் செய்யும் வகையில் நா்சரி அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும் பாா்வையிட்டாா்.
அங்கன்வாடி மையம் ஆய்வு
பின்னா் செங்காடு அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கான்வாடி பணியாளரிடம் மையத்துக்கு வரும் குழந்தைகள் விவரம், பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்து கேட்டறிந்தாா்.
ஆய்வில் பங்கேற்றோா்
இந்த ஆய்வுகளில் வேளாண்மை இணை இயக்குநா் பெ.கலைச்செல்வி, உதவி இயக்குநா் கவிதா, ராசிபுரம் வட்டாட்சியா் எஸ்.சரவணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu