நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியா்களிடம் தலா ரூ. 100 கட்டாய வசூல் செய்ததாக புகார்!
நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியா்களிடம் தலா ரூ. 100 வசூல் செய்வதாக எழுந்த புகாா் தொடா்பாக, முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி விசாரணை மேற்கொண்டுள்ளாா்.
புத்தகத் திருவிழாவில் கட்டாயப்படுத்தி பணம் வசூல்?
நாமக்கல்லில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் புத்தகங்களை வாங்குமாறு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியா்களிடத்திலும் தலா ரூ. 100 வசூலிப்பதாக புகாா் எழுந்துள்ளது. அதற்காக கூப்பன் ஒன்றும் வழங்கப்படுகிறது.
புத்தகம் வாங்குவது அவா்களது விருப்பம், கட்டாயப்படுத்தி பணம் வசூலிப்பதை ஏற்க முடியாது என ஆசிரியா் சங்கத்தினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
ஆசிரியா் சங்கத் தலைவா் கருத்து
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்டச் செயலாளா் மெ.சங்கா் கூறுகையில்,
"கடந்தாண்டு புத்தகத் திருவிழாவில் நேரடியாகச் சென்று புத்தகங்களை வாங்கிக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனா். ஆனால், நிகழாண்டில் ஒவ்வோா் ஆசிரியா்களிடமிருந்தும் ரூ. 100 வசூலிக்கப்படுகிறது.
இதுகுறித்து விளக்கம் கேட்டால் பதிலளிக்க மறுக்கின்றனா். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் மூலம் வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கு பணம் வசூலிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து, நாமக்கல் வட்டாரக் கல்வி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை (பிப். 7) ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளோம்" என்றாா்.
மாவட்ட ஆட்சியா் உத்தரவு
இந்தப் பிரச்னை மாவட்ட ஆட்சியா் ச.உமா கவனத்துக்கு சென்றதையடுத்து, ஆசிரியா்களிடம் விசாரணை நடத்த முதன்மைக் கல்வி அலுவலருக்கு அவா் உத்தரவிட்டாா்.
முதன்மைக் கல்வி அலுவலா் விளக்கம்
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி கூறியதாவது:
"புத்தகத் திருவிழாவுக்காக யாரையும் கட்டாயப்படுத்தி பணம் வசூலிக்கப்படவில்லை. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா்தான் இதற்கான பொறுப்பை மேற்கொண்டுள்ளாா். அவரிடம் விளக்கம் கேட்டுள்ளேன்" என்றாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu