அதிசயம்..ஆனால் உண்மை: திரும்ப கிடைத்தது விவசாயிகள் கொடுத்த லஞ்ச பணம்

அதிசயம்..ஆனால் உண்மை: திரும்ப கிடைத்தது விவசாயிகள் கொடுத்த லஞ்ச பணம்
X

தாங்கள் அதிகாரிகளுக்கு  லஞ்சமாக கொடுத்த  பணம் திரும்ப கிடைத்த மகிழ்ச்சியில் விவசாயிகள்.

திருவண்ணாமலையில் இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலியாக விவசாயிகள் கொடுத்த லஞ்ச பணம் அவர்களுக்கு திரும்ப வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா கேட்டவரம்பாளையம் கிராமத்தில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகின்றது.

இங்கு ஒரு மூட்டைக்கு ரூ.40 முதல் ரூ.60 வரை விவசாயிகளிடம் இருந்து கட்டாய வசூல் செய்வதாகவும், அந்த பணத்தை திரும்பதர வலியுறுத்தியும், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கடந்த 13-ந்தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“திருவண்ணாமலையில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கண்டித்து போராட்டம்” என்ற தலைப்பில் கடந்த 13-ந்தேதி நமது இன்ஸ்டா நியூஸ் செய்தி தளத்தில் இது குறித்து விரிவான செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.

இந்தப் புகாா் குறித்து அறிந்த வாணிபக் கழகத்தின் மண்டல மேலாளா் தேன்மொழி, 2023 ஜனவரி 2-ஆம் தேதி தொடங்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை.புகாா் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தாா்.

இதற்கிடையே, விவசாயிகள் கொடுத்த புகாா்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு கடலாடி காவல் நிலையத்தில் வாணிபக் கழகம் சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலக அலுவலர்கள் கேட்டவரம்பாளையம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விசாரணை நடத்தியதில், நெல் மூட்டைக்கு கட்டாய வசூல் செய்தது விசாரணையில் கண்டறியப்பட்டது.

அதைத் தொடர்ந்து அந்த நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் பணியாற்றிய 3 தற்காலிக ஊழியர்களான பருவகால பட்டியல் எழுத்தர் ஜெயபால், உதவியாளர் இளையராஜா, காவலர் பாஸ்கரன் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இந்த பிரச்சினையை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டுவர தவறிய கேட்டவரம்பாளையம் நேரடி நெல்கொள்முதல் நிலைய அலுவலர் அண்ணாமலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திரும்பக் கிடைத்த லஞ்சப் பணம்:

இந்த நிலையில், விவசாயிகள் சங்க நிா்வாகிகளை சந்தித்த கேட்டவரம்பாளையம் நெல்கொள்முதல் நிலைய அதிகாரிகள் லஞ்சமாக வாங்கிய ரூ.38,320-ஐ திரும்பக் கொடுத்தனா்.

இந்தப் பணத்தை 10 பேருக்கு சங்க நிா்வாகிகள் பிரித்துக் கொடுத்தனா். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். தகவலறிந்த மற்ற விவசாயிகளும் தங்களிடமிருந்து வசூலித்த லஞ்சப் பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என்று சங்க நிா்வாகிகளிடம் மனு அளித்து வருகின்றனா்.

Tags

Next Story