அரசு மருத்துவமனையில் எலும்பு மாற்று அறுவை : அரசுக்கு பாராட்டு
![அரசு மருத்துவமனையில் எலும்பு மாற்று அறுவை : அரசுக்கு பாராட்டு அரசு மருத்துவமனையில் எலும்பு மாற்று அறுவை : அரசுக்கு பாராட்டு](https://www.nativenews.in/h-upload/2022/08/22/1580710-img-20220822-wa0007.webp)
மதுரை அரசு மருத்துவமனையில் செயல்படுத்தப்பட்டுள்ள எலும்பு வங்கியின் மூலம் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை பெற்று பயனடைந்தவர்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
மதுரை அரசு மருத்துவமனையில் செயல்படுத்தப்பட்டுள்ள எலும்பு வங்கியின் மூலம் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை பெற்று பயனடைந்தவர்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
மனிதர்களின் ஆரோக்கியமான வாழ்விற்கு எலும்புகள் மிக இன்றியமையாதவை ஆகும். எலும்புகள் பாதிக்கப்பட்டாலோ, முறிவு ஏற்பட்டு சிகிச்சை அளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டாலோ சம்மந்தப்பட்ட தனிநபர் தன் வாழ்நாள் முழுவதும் மாற்றுத்திறன் கொண்ட நபராக வாழும் நிலை ஏற்படுகிறது. அக்குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்படும் நிலை உண்டாகிறது. இத்தகைய சூழ்நிலைகளை தவிர்த்திடும் நோக்கில் தமிழ்நாடு அரசு எலும்பு வங்கியை செயல்படுத்தி வருகிறது.
எலும்பு வங்கி என்பது பல்வேறு நோயாளிகளுக்குப் பயன்படுத்தக்கூடிய எலும்புகளை மீட்டெடுத்தல், பதப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் செயல்முறையாகும். ஒருவரிடமிருந்து பாதுகாப்பாக எடுக்கப்படும் எலும்பு அதே நபருக்கு பொருத்தப்பட்டால் ஆட்டோகிராஃப்ட் எனப்படும். அதேசமயம் ஒருவரிடமிருந்து எடுக்கப்படும் எலும்புகளை வேறு ஒருவருக்கு பொருத்தினால் அல்லோகிராஃப்ட் என்று அழைக்கப்படுகிறது. நம் நாட்டில் மிகக் குறைவான எலும்பு வங்கிகளே உள்ளன. பெரும்பாலும் நாம் எலும்பு மாற்றுகளை சார்ந்து இருக்கிறோம். எலும்பு அல்லோகிராஃப்ட்கள் இயற்கையான எலும்பைப் போலவே சிறப்பாக இணைக்கப்படும் தன்மையுள்ளன.
அந்த வகையில், மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் தென்தமிழகத்தில் முதன்முறையாக கடந்த டிசம்பரில் ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் எலும்பு வங்கி துவக்கப்பட்டது. விபத்துகளில் சிக்கி சிகிச்சைக்கு வருவோருக்கு, இவ்வங்கி மூலம் மாற்று எலும்பு, ஜவ்வு போன்றவை வழங்கி, சிகிச்சை தந்து உறுப்புகளை காப்பாற்றிஇ உயிர் பிழைக்க வைக்கலாம். மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் இதுவரை 35 எலும்புகள் நோயாளிகளிடமிருந்து பெறப்பட்டுள்ளது. மேலும், 2 எலும்புகளும், ஜவ்வுகளும் இறந்தவர்களிடமிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பெறப்பட்ட எலும்புகள், ஜவ்வுகளால் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சையில் பாதிக்கப்பட்ட 7 பேர் பயனடைந்துள்ளனர்.
மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் உள்ள எலும்பு வங்கியானது தகுந்த பாதுகாப்பு இயந்திரங்கள் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஒருவர் இறந்த 12 மணி முதல் 24 மணி நேரத்திற்குள் எலும்புகள், ஜவ்வுக்கள் எடுக்கப்பட வேண்டும். உயிருடன் இருப்பவர்களிடமிருந்தும் இதனை எடுக்கலாம். உறவினர்கள், உரிய நபர் ஒப்புதலுடன் எடுக்கப்படும் இந்த எலும்புகள், ஜவ்வுகளானது குளிர் சாதனப் பெட்டியில் மைனஸ் 80 டிகிரியில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. 60 நாட்களுக்கு பிறகு. இதனை எடுத்து கதிர்வீச்சு மூலம் கிருமிநீக்கம் செய்து, பின்னர் குளிர்சாதனப்பெட்டியில் சேர்க்கப்படுகின்றன. சேமிக்கப்பட்ட எலும்பு மற்றும் ஜவ்வுகள் 5 வருடம் வரை பயன்படுத்தலாம்.
மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் முழங்காலில் தசைநார் கிழிந்து 3 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் இறந்த ஒருவரின் எலும்பானது இவர்களுக்கு பொருத்தி சிகிச்சை வழங்கியதன் மூலம் குணமடைந்துள்ளனர். இதேபோல், உடைந்த எலும்பு சேராமல் அவதிப்பட்ட 3 நோயாளிகளுக்கும், முதுகு கோணலாகி இருந்தவருக்கும் சிகிச்சை வழங்கப்பட்டு அனைவரும் முழுமையாக குணம் பெற்றுள்ளனர். பொதுவாக தனியார் மற்றும் எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகளில் மட்டுமே எலும்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்து வரும் நிலையில், தென் தமிழகத்தில் முதன்முறையாக எலும்பு மாற்று சிகிச்சையில் மதுரை அரசு இராசாசி மருத்துவமனை மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி வருகிறது.
ஒருவரிடம் சவ்வு பகுதி பெறப்பட்டால், அதனை 4 பேருக்கு பயன்படுத்த முடியும். உடலில் அதிகளவிலான தழும்பு ஏற்படாமலும்இ குறைந்த வலியுடனும் சிகிச்சை பெறலாம். அறுவை சிகிச்சைக்கு பிறகு சிகிச்சை பெற்றவர் முழுமையான இயல்பு நிலைக்கு திரும்புவார். ஏற்கெனவே தயார் நிலையில் இருக்கும் எலும்பு, ஜவ்வுகளை உரிய முறைப்படி தேவைக்கரிய வகையில் இணைப்பதால், பிற அறுவை சிகிச்சைக்கான நேரத்தை விட, இவ்வகை அறுவை சிகிச்சைக்கான நேரம் குறையும்.
கண்தானம், ரத்ததானம் போல உடல்தானமும் குறிப்பாக எலும்பு, ஜவ்வுதானம் வழங்குவதற்கான விழிப்புணர்வு மக்களிடம் அதிகரிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு, பொதுமக்களிடம் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து, தட்டுப்பாடின்றி எலும்பு, ஜவ்வு போன்றவை கிடைத்தால், பாதிக்கப்பட்ட மேலும் பலருக்கு பலன் கிடைக்கும். வசதி படைத்தோர் மட்டுமே பெற முடிகிற சிகிச்சையை ஏழை, எளியோரும் பெற்று பயன்பெற தமிழ்நாடு முதலமைச்ச தலைமையிலான அரசு இத்திட்டத்தை மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் செயல்படுத்தி வருகிறது.
சிகிச்சை செய்து கொண்ட சில நாட்களிலேயே இயல்பாக இயங்க முடிகிறது. பாதுகாப்பு, விளையாட்டுத்துறைகளில் தொடர் சாதனை புரியும் நம்பிக்கையை தந்துள்ளது. பெரும் செலவில் கிடைக்க வேண்டிய சிகிச்சையை, மிக இலகுவாக பெற முடிகிறது. மதுரை அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த வசதி, தென்மாவட்ட மக்களுக்கு பெரும் பயனாக அமைந்துள்ளது. இத்தகைய திட்டத்தை செயல்படுத்தியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் நெஞ்சார்ந்த நன்றியை சிகிச்சை பெற்று பயனடைந்தோர் தெரிவித்துள்ளனர். இத்தகவலை மதுரை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவவர் சாலிதளபதி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கயிலைச் செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu