மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அஷ்டமி சப்பர விழா

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அஷ்டமி சப்பர விழா
X

 மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அஷ்டமி சப்பர வீதி உலா; பக்தர்களுக்கு சுவாமி படியளக்கும் நிகழ்வு நடைபெற்றது.

மதுரை என்றாலே பலருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவிலாகும்

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அஷ்டமி சப்பர வீதி உலா; பக்தர்களுக்கு சுவாமி படியளக்கும் நிகழ்வு நடைபெற்றது.

மதுரை என்றாலே பலருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவிலாகும். சிவபெருமான் மற்றும் அம்மன் இருவருக்குமான கோவில்களில் முதன்மைச் சிறப்பு பெற்றது மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில். மதுரையில் மீனாட்சி பிறந்ததாகக் கருதப்படுவதால், மீனாட்சி சந்நிதானம் முதன்மையாக உள்ளது. அம்மனை வணங்கிய பின்பே சிவபெருமானை வணங்கும் மரபு கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆலயம் மீனாட்சி , சுந்தரேஸ்வரரை முதன்மை விக்கிரகங்களாகவும் கடம்ப மரத்தினை தலவிருட்ஷமாகவும் கொண்டுள்ளது.

பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் வந்ததால் அவன் கடம்பவனம் என்ற காட்டை அழித்து மதுரை மாநகரையும் இந்த சிவசக்தி தலத்தையும் அமைத்ததாகக் கருதப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோவிலைச்சுற்றி நான்கு மாடங்கள் அமைத்துள்ளதால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு. சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக் கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது என்று ஒரு வரலாறு கூறுகிறது.

மதுரை மீனாட்சியில் அமைந்துள்ள முதன்மை விக்கிரகம் முழுவதுமாக தூய மரகத மாணிக்கத்தினால் உருவாக்கப்பட்டதாகும். மரகத்தின் இயற்கை வர்ணமான பச்சை நிறத்தில் காட்சி தரும் மூல விக்கிரகத்தினை மரகதவல்லி எனவும் அழைக்கின்றனர். மதுரை மீனாட்சி கோவில் 45 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.ஆலயத்தின் மொத்த தள அமைப்பு 254 மீட்டர் நீளமும் 237 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது.

இந்த ஆலயம் 8 கோபுரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. 8 கோபுரங்களும், நான்கு முனை சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள இரட்டை கோபுரத்தில் ஒன்று மீனாட்சிக்கும், மற்றொன்று சுந்தரேஸ்வரர்க்கும் அர்பணிக்கப்பட்டுள்ளது. ஒன்பது தட்டுக்களை கொண்ட கோபுரங்களுள் பிரசித்தமானதும் மிக உயரமானதுமாக தெற்கு வாசல் 170 அடி உயரமுடையது.மற்றய வடக்கு, மேற்கு, கிழக்கு கோபுரங்கள் முறையே 160, 163, 161 அடி உயரம் என்பதும் குறிப்பிடதக்கது.மீனாட்சி ஆலயம் பல உள்ளக மண்டபங்களையும் கொண்டுள்ளது. இவற்றுள் ஆயிரம் கால் மண்டபம் மிகவும் பிரசித்தி பெற்றது.

600 வருடங்களின் மேலான கட்டுமானத்தில் உருவாகியதும், மிகவும் கலை அம்சம் மிக்கதுமான இந்த ஆலயத்தில் மொத்தமாக 33 மில்லியன் கலை வேலைப்பாடுகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது.ஆலய உட்பகுதியில் ஒரு ஏக்கர் விஸ்தீரனத்தில் அமைந்துள்ள பொற்தாமரை குளமும், தலவிருட்ஷமான கடம்ப மரமும் ஆலயத்தின் வரலாற்றில் மேலும் சிறப்பு சேர்க்கின்றன. பல நூற்றாண்டு பழமையான கட்டிட வேலைப்பாடுகளை கொண்டுள்ள இந்த ஆலயம் நவீன பல் வர்ண பூச்சுக்களால் தற்காலத்தில் அலங்கரிக்கப் பட்டுள்ளது. வரலாற்று தொன்மையும் பிரமிக்க வைக்கும் கலை நுணுக்கமும் ஒன்றுசேர உள்ள இந்த ஆலயமனது உலக அதிசயங்களின் வரிசையில் போட்டி போட்டது நினைவிருக்கலாம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதே போன்று மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று வெளி வீதிகளில் நடைபெறும் அஷ்டமி சப்பர திருவிழாவும் பிரசித்தி பெற்றது.

இத்திருவிழா உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன்படியளந்த லீலை முத்தாய்ப்பானது. இந்த விழா தினத்தன்று சுந்தரேசுவரர் பிரியா விடையுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும், சப்பரங்களில் எழுந்தருளி கீழமாசி வீதியில் இருந்து கீழவெளி வீதி, தெற்கு வெளிவீதி, திருப்பரங்குன்றம் சாலை, மேலவெளிவீதி, வக்கீல் புதுத்தெரு வழியாக இருப்பிடத்தை அடைவர். இதில், மீனாட்சிஅம்மன் சப்பரத்தை பெண்கள் இழுப்பது தனிச்சிறப்பாகும். அப்போது இறைவன் அனைத்து உயிர்களுக்கும் படியளப்பதை விளக்கும் விதமாக அரிசியை வீதிகளில் போட்டு வருவார்கள். பக்தர்கள், கீழே சிதறி கிடக்கும் அந்த அரிசியை சேகரித்து, வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால் அள்ள, அள்ள அன்னம் கிடைத்து, பசி எனும் நோய் ஒழியும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

Tags

Next Story