மதுரையில் பலகோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி
![மதுரையில் பலகோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி மதுரையில் பலகோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி](https://www.nativenews.in/h-upload/2023/02/07/1655652-img-20230206-wa0035.webp)
மதுரையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசுகிறார், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுமேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுமேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 72,092 பயனாளிகளுக்கு ரூ.173 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி, சியாமா பிரசாத் முகர்ஜி ரூர்பன் திட்டத்தின் கீழ் ரூ.8.65 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 30 திட்டப் பணிகளைதொடங்கி வைத்தார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், (06.02.2023) மதுரை மாவட்டம், பாடிண்டிகோவில் சுற்றுச்சாலை அருகே உள்ள கலைஞர் திடலில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பாக மகளிர் சுய உதவிக் குழுக்களை சார்ந்த 72,092 பயனாளிகளுக்கு ரூ.173 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி, சியாமா பிரசாத் முகர்ஜி ரூர்பன் திட்டத்தின் கீழ் ரூ.8.65 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 30 திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்கள்.
இவ்விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பேசியதாவது:-
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்திக்கு, எதையும் சதாரணமாகச் செய்யத் தெரியாது, எதைச் செய்தாலும் பிரமாண்டமாகத்தான் செய்வார். இதை நான் மட்டும் சொல்லவில்லை. நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர், இதைத்தான் வலியுறுத்துகின்றார்.
அமைச்சர் பி.மூர்த்தி, கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, பிரம்மாண்டமாக, மாநாடு போல நடத்தவேண்டும் என, நினைப்பார். அந்தவகையில்தான் இந்த நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியும் ஒரு மாநாடு போல நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. தனக்கு வழங்கப்பட்ட பத்திரப் பதிவு துறையிலும் முத்திரை பதிக்கும் வகையில் செயல்பட்டு, அரசுக்கு வரும் வருவாயை அதிகரித்துள்ளார் மூர்த்தி.
வழக்கமாக ஒரு நிகழ்ச்சிக்கு தேதி வாங்குகிறோம் என்றால், 'இந்தமாதிரி ஒரு நிகழ்ச்சி. அதுக்கு நீங்க வரணும்' என்றுதான் கேட்டு தேதி வாங்குவார்கள். ஆனால், அமைச்சர் மூர்த்தி அவர்களோ, எந்த நிகழ்ச்சிக்கு தேதி வாங்குவதாக இருந்தாலும், 'அது என்ன நிகழ்ச்சி' என்று சொல்லமாட்டார். '25 ஆயிரம் பேர் வருவாங்க உதயா, 50 ஆயிரம் பேர் உதயா, 75 ஆயிரம் பேர் உதயா' என்றுதான் ஆரம்பிப்பார். எந்த நலத்திட்டமாக இருந்தாலும் அதிக மக்கள் பயன்பெறவேண்டும் என்று நினைப்பார். அவை அனைத்தும் என் கையால்தான் வழங்கப் படவேண்டும் என்றும் விடாப்பியாக இருப்பார். அப்படித்தான் இந்த நிகழ்ச்சிக்கும் மூர்த்தி, தேதி வாங்கி, என் கையால் நலத்திட்ட உதவிகளை வழங்கும் வாய்ப்பை, பெருமையை எனக்கு அளித்துள்ளார்.2018-ல் என்னை வைத்து முதன்முதலில் நிகழ்ச்சி நடத்தியதும் அமைச்சர் மூர்த்தி தான். அதன்பிறகு, ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்று முறை மதுரைக்கு வந்துள்ளேன்.
இதே மதுரையில், முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில், மாபெரும் நூலகம் அமைக்கப்பட்டு, இன்னும் சில மாதங்களில் அது மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு இணையாக 114 கோடி ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 2.70 ஏக்கர் நிலத்தில், 2 லட்சத்து 13 ஆயிரம் சதுர அடி பரப்பில், 8 தளங்களுடன் அறிவுத் தளமாக உயிர்பெற்று வருகிறது மதுரை கலைஞர் நூலகம். அதன் கட்டுமானப் பணிகளின் புகைப்படங்களை பார்க்கும்போதே அதன் பிரமாண்டமும், கல்வியை மட்டுமே ஒரே வாய்ப்பாக நினைக்கும் லட்சக்கணக்கான ஏழை-எளிய மாணவர்களின் எதிர்காலமும், அவர்களின் கனவுகளும்தான் என் கண்களுக்கு தெரிகின்றன.
இதே மதுரை ஆதிமூலம் அரசு தொடக்கப்பள்ளியில்தான், தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா பிறந்த செப்டம்பர் 15 அன்று காலையில், இந்திய ஒன்றியத்திற்கே முன்னோடி திட்டமாக, நம் மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை நம்முடைய திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.
நகராட்சியாக இருந்த மதுரையை, மாநகராட்சியாக தரம் உயர்த்தியதும் முத்தமிழறிஞரின் ஆட்சி காலத்தில்தான். அதேபோல ,சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை மதுரையில் அமைய காரணமாக இருந்ததும் முத்தமிழறிஞர் கலைஞர் தான். இப்படி, மதுரையின் வளர்ச்சியை மனதில் வைத்து கலைஞர் எந்தளவுக்கு உழைத்தார் என்பதற்கான உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். எப்பொழுதெல்லாம் கழக ஆட்சி அமைகிறதோ அப்போதெல்லாம் மதுரையும், இம்மாவட்ட மக்களின் வாழ்வும் உயர்கிறது என்றால் அது மிகையல்ல.
மதுரைக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்குமே கழக அரசு அமைந்த இந்த 21 மாதங்களில், முதலமைச்சர் என்னென்ன திட்டங்களை நிறைவேற்றித் தந்துள்ளார் என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். தேர்தல் அறிக்கையில் அவர் அளித்த வாக்குறுதிகளில் 75 சதவிகிதத்துக்கும் மேல் நிறைவேற்றித் தந்துள்ளார்கள். எங்களிடம் உள்ள ஒரே பிரச்னை, செய்வதை மக்களிடம் சொல்வதில்லை.
ஆனால், எதிர்க்கட்சிகள் பரப்பும் அவதூறுகள் வாட்ஸ்அப் வதந்திகளாக எங்களுக்கு முன்னால் போய்ச் சேர்ந்து விடுகின்றன. இந்த 21 மாதங்களுக்கு முன்பு அதிமுக அரசு இருந்தபோது என்ன செய்தது. லட்சக்கணக்கான கோடி கடன்களையும், காலியான கஜானாவையும், அடிமை அரசு என்ற அவப்பெயரையும் மட்டுமே விட்டுச் சென்றது. தடுமாறிக் கிடந்த தமிழ்நாட்டு அரசை தலைநிமிரச் செய்தவர் நம் முதலமைச்சர், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றால் அது மிகையல்ல. கடந்த 21 மாதங்களில் அவர் நிகழ்த்தியுள்ள சாதனைகளில் சிலவற்றை மட்டும் உங்களிடம் எடுத்துக்கூற விரும்புகிறேன்.
நம் முதலமைச்சர், பொறுப்பேற்றதும் அவர் இட்ட முதல் கையெழுத்தில் ஒன்று, பெண்கள் கட்டணமில்லாமல் பேருந்தில் பயணம் செய்யலாம் என்பதுதான்.இதனால், நம் வீட்டுப் பெண்களுக்கு ஒவ்வொரு நாளும் எவ்வளவு தொகை மிச்சமாகிறது என்பது உங்களுக்கே தெரியும். இதன்மூலம் இதுவரை நம் பெண்கள் தமிழ்நாடு முழுவதும் 220 கோடி பயணங்கள் மேற்கொண்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் மட்டும் 11 கோடியே 81 லட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.
நம் முதலமைச்சர் , கல்விக்கும் மருத்துவத்துக்கும்தான் பெருமளவில் நிதி ஒதுக்கி திட்டங்களை தீட்டி வருகிறார் என்பது உங்களுக்குத் தெரியும். அதற்கு சிறந்த உதாரணம்தான் 'புதுமைப் பெண்' திட்டம். உங்க வீடுகள்ல 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்துவிட்டு கல்லூரி செல்லும் மாணவிகள் இருந்தால் அவர்களின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் 1000 ரூபாய் வரவு வைக்கப்படும். அது பி.ஏ., பி.எஸ்சி., பி.காம் போன்ற ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் படிப்பா இருந்தாலும் சரி, பி.இ மாதிரியான இன்ஜினியரிங் படிப்பா இருந்தாலும் சரி, ஐடிஐ, பாலிடெக்னிக் மாதிரியான தொழிற்படிப்பா இருந்தாலும் சரி, படிக்கிற மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறார் நம் முதலமைச்சர்.
அந்த மாணவிகள், நோட்டு-புத்தகம் வாங்க உங்களிடம் வீட்ல பணம் எதிர்பார்க்கவேண்டிய அவசியமே இப்ப இல்லை. அவர்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைச்சுடுச்சு. இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை தமிழ்நாடு முழுவதும் 1 லட்சத்து 16 ஆயிரம் பேர் பயனடைகின்றனர். தற்போது ,கூடுதலாக 1 லட்சத்து 4 ஆயிரத்து 334 மாணவிகள் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கும் நாளை மறுநாளில் இருந்து வழங்க உள்ளார்கள். கொரோனா காலத்தில், பலரும் வீட்டிலேயே முடங்கிக்கிடந்தோம். இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற வழக்கமான நோய்களுக்குக்கூட சிகிச்சை பெற மருத்துவமனைக்கு செல்ல பயந்த சூழல். அதை ஈடுகட்டும் வகையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை நம் முதலமைச்சர் தொடங்கிவைத்தார்ள்.
வீடு வீடாக சென்று மருந்து பெட்டகத்தை வழங்கி, மருத்துவம் பார்ப்பதுதான் இதன் நோக்கம். அப்படி இதுவரை 1 கோடிக்கும் மேற்பட்ட மருந்து பெட்டகங்கள் பயனாளிகளிடம் சென்று சேர்ந்துள்ளன. அத்திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் 1 லட்சத்து 70 ஆயிரம் பயனாளிகளுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டுள்ளது.
காலை பள்ளிக்கு வரும் குழந்தைகள் பசியுடன் வரக்கூடாது என்ற நோக்கில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறுகின்றனர். மதுரை மாநகராட்சியில் உள்ள 26 மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் பயிலும் 3 ஆயிரத்து 185 மாணவ-மாணவிகள் இதன்மூலம் பயன்பெறுகின்றனர். இத்திட்டம் படிப்படியாக அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று முதலமைச்சர், அறிவித்துள்ளார்கள். நம் முதலமைச்சர், வந்தபிறகு தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் இலவச மின் இணைப்பை வழங்கியுள்ளார்.
இது மிகப்பெரிய சாதனை. இதில், மதுரையைச் சேர்ந்த 3 ஆயிரத்து 334 விவசாயிகள் புதிய மின் இணைப்புகள் பெற்றுள்ளனர்.மதுரையில் மட்டும் 29 ஆயிரத்து 990 விவசாயிகளுக்கு 257 கோடி ரூபாய் மதிப்பில் பயிர்க்கடன், . 37 ஆயிரத்து 342 பயனாளிகளுக்கு 171 கோடி ரூபாய் மதிப்பில் பொது நகைக்கடன், 21 ஆயிரத்து 220 மகளிர் உதவிக் சுய குழுக்களுக்கு 42 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் கூட்டுறவு வங்கிகளில் மட்டும் பெற்ற கடன்கள். இன்னும் ஏராளமான திட்டங்களை நம் திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது. அனைத்தையும் சொல்ல நேரம் போதாது. சிலவற்றை மட்டுமே இங்கே மேற்கோள் காட்டியுள்ளேன். திட்டங்களை அறிவிப்பது மட்டும் இன்றி, அவை முழுமையாக மக்களிடம் சென்று சேர்கிறதா என்பதை உறுதி செய்ய, 'கள ஆய்வில் முதலமைச்சர்' எனும் புதிய திட்டத்தையும் தொடங்கி அதன் முதல் ஆய்வுக் கூட்டத்தையும் முடித்துள்ளார் நம்முடைய முதலமைச்சர் .
என்னுடைய விளையாட்டுத்துறை சார்பாக ,மதுரை மேலூர் அருகேயுள்ள திருவாதவூரைச் சேர்ந்த செல்வி.அர்ச்சனா 10.02.2023 முதல் 12.02.2023 வரை கஜகஸ்தானில் நடைபெறவுள்ள 10-வது ஆசிய உள்ளரங்க தடகளப் போட்டிக்கு 50 மீட்டர் பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல், ஊமச்சிகுளம் அருகில் உள்ள குடிமங்கலத்தைச் சேர்ந்த செல்வன். டி.செல்வபிரபு, 2022-ம் ஆண்டு கொலம்பியாவில் நடைபெற்ற உலக தடகள் சாம்பியன்ஷிப் மும்முறை தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்துகொண்டு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இப்போட்டியில் வெள்ளிபதக்கம் வெல்லும் முதல் இந்திய வீரர் இவர்தான்.
அதேபோல், மதுரை தெற்கு வாசலைச் சேர்ந்த செல்வி. ஜெர்லின் அனிகா, 2021ம் வருடம் பிரேசில் நாட்டில் நடைபெற்ற காது கேளாதவர்கள் இறகுப்பந்து ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்துகொண்டு ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கமும், கலப்பு இரட்டையர் போட்டியில் தங்கப்பதக்கமும், குழு போட்டியில் தங்கப்பதக்கமும் வென்றுள்ளார். 2022ம் வருடத்திற்கான அர்ஜூனா விருது பெற்றவர்.அலங்காநல்லூர் அருகில் உள்ள மேட்டுப்பட்டியைச் சேர்ந்த செல்வன்.எம்.கபிலன், 2022-ம் ஆண்டு ஈரான் நாட்டில் நடைபெற்ற 14-வது ஆசிய ஆண்கள் வாலிபால் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.
இன்னும் ஏராளமான விளையாட்டு வீரர்களைகளையும் வழங்கியுள்ளது நம் மதுரை மண். இங்கிருந்து இன்னும் நிறைய வீரர்-வீராங்கனைகள் வருவார்கள் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.அடுத்து மகளிர் சுய உதவிக்குழு.நான் இந்தத் துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்ற இந்த ஒன்றரை மாத காலங்களில் கோவை, திருச்சி, சேலம், நாமக்கல் என நான்கு மாவட்டங்களில் அரசின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினோம்.
தற்போது, 5-வது மாவட்டமாக மதுரையில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. பொங்கல் திருநாள், ஜல்லிக்கட்டு விழா, சித்திரை திருவிழா என வருடத்தின் எல்லா நாட்களும் திருவிழா கோலம் கொண்டிருக்கும் மதுரை நகரில் இன்று 71 ஆயிரம் மகளிர் பயனடையும் வகையில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் இந்த நிகழ்ச்சியால், நலத்திட்ட திருவிழாவாக மாறியுள்ளது மதுரை.
இந்த விழா மேடையில் மதுரை மாவட்டத்தில் 8 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 30 பணிகளின் பயன்பாட்டை தொடங்கிவைத்து, மதுரை மாவட்டத்தின் 9 ஆயிரத்து 344 சுய உதவிக் குழுக்களை சேந்த 72092 ஆயிரம் மகளிர் பயனடையும் வகையில் 173 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளையும் வழங்கியுள்ளோம். மதுரையில் மட்டும் இதுவரை, 11 ஆயிரத்து 616 சுய உதவிக் குழுக்களுக்கு 645 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கிக் கடனுதவிகளை நம் அரசு வழங்கியுள்ளது.
பெண்கள் என்பவர்கள் படிப்பிலும், உழைப்பிலும் ஆண்களைவிட ஒரு படி மேல் இருக்கிறீர்கள். தோல்வியை வெற்றியாக்கும் மனவலிமை உங்களுக்குத்தான் இருக்கிறது. எதிர்நீச்சல் போட்டு முன்னேற நினைக்கும் உங்களுக்கு, எதிர் நீச்சல் போட உதவும் துடுப்பாகத்தான் இந்த கடனுதவிகளைப் பார்க்கிறேன்.
திராவிட இயக்கத் தலைவர்களான பெரியார், அண்ணா, கலைஞர் செய்தவற்றின் தொடர்ச்சியாகத்தான் இன்றைய முதலமைச்சர் இந்தக் கடனுதவிகளை உங்களுக்கு அளிக்கிறார். பெண்களுக்கு கல்வியை கொண்டு சேர்க்க மேடைதோரும் பிரசாரம் செய்தார் தந்தை பெரியார். அவற்றை செயலாக்க இயக்கம் தொடங்கினார் பேரறிஞர் அண்ணா. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, உள்ளாட்சியில் இடஒதுக்கீடு, அதிகாரப் பரவலாக்கம் செய்தார் முத்தமிழறிஞர் கலைஞர். இந்த சுய உதவிக் குழு இயக்கம்கூட அவரால் தொடங்கப்பட்டதுதான்.
அவர் வழியில், உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது,மகளிர் சுய உதவி குழுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அதிகமான கடனுதவிகளை பெற்றுத்தந்து, பல மணி நேரத்திற்கும்மேலாக நின்றுக் கொண்டே மகளிருக்கு சுழல் நிதிகளை வழங்கியவர்தான் இன்றைய திராவிட மாடல் அரசின் முதலமைச்சர், அவரால்தான் தமிழக சுயஉதவிக்குழு திட்டம் இன்று இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழ்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் ,அயராத செயல்பாட்டின் விளைவாக இன்று தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் 4 லட்சத்து 38 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம், 50 இலட்சம் உறுப்பினர்களைக் கொண்டு சிறப்போடு செயல்பட்டு வருகிறது.மகளிர் சுய உதவிக் குழுக்களின் வெற்றிகரமான செயல்பாட்டின் அடையாளமாக, மதுரை மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவின் மூலம் வளர்ச்சி அடைந்தவர்களில் சிலரை மட்டும் இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன்.
சாமநத்தம் ஊராட்சியில், செயல்படும் துளசி மகளிர் சுயஉதவிக் குழுவின் உறுப்பினரானசுசீலா, சணல் பொருட்கள் தயாரிப்பால் முன்னேற்றம் அடைந்தவர். பாரம்பரிய மரச்செக்கு எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ஸ்ரீ ராக்காயி அம்மன் குழுவை சேர்ந்த கலாமணி,நர்சரி கார்டன் வளர்த்து வரும் பட்டூர் ஸ்ரீ அம்மன் குழுவை சார்ந்த அம்பிகா,பட்டுநூல் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் சொரிக்காம்பட்டி ஊராட்சி தங்கரதம் குழுவைச் சேர்ந்த சுதா, நாட்டுக்கோழி வளர்ப்பில் தனிநபராக ஈடுபட்டு வெற்றிகரமாக நடத்திவரும் தேவா குழுவை சார்ந்த கார்த்திகா ,
சமயநல்லூரில் ஆவின் பார்லர் நடத்திவரும் சமயநல்லூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்கள், சத்திரவெள்ளாளப்பட்டியில் ஸ்ரீ சிவன் குழு மூலம் கஸ்தூரி மஞ்சள் பொடி தயரிக்கும் சங்கீதா மற்றும் சிறுதானிய மாவு உற்பத்தி தொழில் செய்யும் மணிமேகலை,இதேபோல், ஏராளமான முன்னுதாரணங்கள் உள்ளீர்கள். உங்களை எல்லாம் நான் ஹீரோக்களாகத்தான் பார்க்கிறேன். குடும்ப வறுமையை எதிர்த்து, குழந்தைகளுக்கான கல்வியை காக்க… என பல லட்சியங்களோடு உழைத்து வருகிறீர்கள்.
அதேபோல், மகளிர் சுயஉதவிக்குழுவைச் சார்ந்த பெண்கள், உள்ளாட்சியில் அதிகாரம் பெறும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகளாக தேர்தலில் வென்றுள்ளனர் என்பது கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களாக 444 பேர், ஊராட்சி தலைவர்களாக 59 பேர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களாக 14 பேர் என மொத்தம் 517 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தங்களது ஆளுமையை செலுத்தி வருகிறார்கள்.
சுய உதவிக்குழுக்கள் ஊக்கத்துடன் செயல்படுவதுடன் தரமான பொருட்களை தயாரித்து வருகிறீர்கள். அதைப் பார்த்துதான் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களையே எனக்கு நினைவுப் பரிசாக வழங்கவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தேன். மீண்டும் அதை இந்த மேடையில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
அரசு மகளிர் சுய உதவிக் குழுக்களின் நலனை கருத்தில் கொண்டு, செயல்படுத்தி வரும் திட்டங்களை நீங்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு உங்களை ஒரு அண்ணனாக, தம்பியாக, மகனாக கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் பெறும் கடனை உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக பயன்படுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன். இது வெறும் பணமல்ல, இந்த அரசு உங்கள் மீது கொண்டுள்ள அக்கறை, அன்பு என்பதை மனதில்வைத்து இந்த அரசை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
2021 தேர்தல் பிரச்சாரத்தின்போது இங்குள்ள எய்ம்ஸ் வளாகத்தில் செங்கல்லை எடுத்தேன். ஆனால் ,இன்னும் அதன் கட்டுமானப் பணியை ஒன்றிய அரசு தொடங்கவில்லை. அதன்பிறகு தொடங்கப்பட்ட கலைஞர் நூலகத்தை நாம் விரைவில் திறக்கவுள்ளோம். செயல்படும் அரசுக்கும், வாயில் வடை சுடும் அரசுக்குமான வித்தியாசம் இதுதான். ஒன்றிய அரசின் இந்த பட்ஜெட்டில்கூட மதுரை எய்ம்ஸுக்கு நிதி ஒதுக்கவில்லை. அதை கண்டித்து ,
நாடாளுமன்ற வளாகத்தில் நம் எம்பி-க்கள் கையில் எய்ம்ஸ் செங்கல்லை வைத்து போராடிய காட்சியைப் பார்த்தேன். 2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்கும் நான் அந்தக் கல்லுடன்தான் செல்லவேண்டும் என நினைக்கிறேன். மதுரை மக்கள் அனைவரும் கையில் செங்கல்லை எடுப்பதற்குள் எய்ம்ஸ் வேலைகள் தொடங்கிவிடும் என நினைக்கிறேன்.
பெண்களுக்கு நான் அதிகம் சொல்லத் தேவையில்லை. ஆண்களைவிட நீங்கள் தெளிவாக புரிந்துகொள்வீர்கள். நீங்க எல்.ஐ.சி-யில் முதலீடு செய்த பணம் காற்றிலேயே காணாமல் போய்கொண்டு இருக்கிறது. குஜராத்தில் நடந்தது என்ன என யூ-டியூப்ல ஒரு ஆவணப்படத்தை வெளியிட முடியலை. உங்க வீட்டு காஸ் கனெக்ஷனுக்கு மானியம் வருவதில்லை. இதையெல்லாம் கேட்க இங்குள்ள எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களும் வர்றதில்லை, ஓனர் யார் என்று முடிவெடுப்பதில் அவர்கள் மும்முரமாக உள்ளார்கள்.
அவங்க உங்களைப் பார்க்க அடுத்தத் தேர்தலுக்குத்தான் வருவாங்க. நாங்க அப்படிக்கிடையாது. கொரோனா-விலும் நாங்கள் உங்களுடன் நின்றோம். இன்றும் நிற்கிறோம். நாளையும் நிற்போம். இதை தெளிவாகப் புரிந்துகொண்டு நீங்கள் எப்போதும் இந்த அரசுக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு,
மகளிர் சுயஉதவிக்குழுவின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு என்றும் துணை நிற்கும், நமது அரசு, மகளிர் மேம்பாட்டினை உறுதி செய்திடும் அரசு என்பதையும் கூறி, மகளிர் சுயஉதவிக்குழுக்களை ஒருங்கிணைக்கக்கூடிய துறையின் அமைச்சராகச் சொல்கிறேன், நான் உங்களுக்காக உழைக்க காத்திருக்கிறேன். உங்கள் கோரிக்கைகளுக்கு செயல் வடிவம் கொடுக்க தொடர்ந்து உழைப்பேன். என்றும் உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்கள் மகனாக, அண்ணனாக, தம்பியாக இருந்து உங்களுக்காக உழைப்பேன் என்ற உறுதியையும் உங்களுக்கு அளித்து,இந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழா வெற்றியடைய உழைத்த அமைச்சர் மூர்த்தி, அமைச்சர் பிடிஆர், மதுரை ஆட்சியர் அனிஷ்சேகர் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்கள் அனைவருக்கும், உங்களுக்கும் நன்றி என்றார் அமைச்சர் உதயநிதி.
இவ்விழாவில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ,நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ்.திவ்யதர்ஷினி, மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.சரவணன், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் , மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு) , ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்) , மு.பூமிநாதன் (மதுரை தெற்கு) , மதுரை மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் எம்.காளிதாஸ் , மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சூரியகலா கலாநிதி,மதுரை துணை மேயர் தி.நாகராஜன், மாநகராட்சி மண்டலத்தலைவர் வாசுகி சசிக்குமார் உட்பட அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu