/* */

வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஆட்டோ பயணம் அசத்தும் ஆட்சியர்

மனு அளிக்க வரும் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பேருந்து நிறுத்தத்திலிருந்து ஆட்சியர் அலுவலகம் வரை ஆட்டோ இலவசம்.

HIGHLIGHTS

வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஆட்டோ பயணம் அசத்தும் ஆட்சியர்
X

இலவச ஆட்டோ பயணம் மேற்கொள்ளும் வயதானவர்கள்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வரும் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் பேருந்து நிறுத்தத்திலிருந்து ஆட்சியர் அலுவலகம் வரை செல்வதற்கு இலவச ஆட்டோக்களை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் இன்று முதல் இயங்கத் தொடங்கியது.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள மக்கள் பல்வேறு குறைகளை நீக்க வலியுறுத்தி மனு அளித்து வருகின்றனர். இந்நிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வரும் முதியவர்கள் பேருந்து நிறுத்தத்தில் இருந்து இறங்கி ஆட்சியர் அலுவலக வளாகத்துக்கு சிரமத்துடன் நடந்து சென்று வந்தனர்.

மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பேருந்து நிறுத்தத்திலிருந்து ஆட்சியர் அலுவலகம் வரை வயதானவர்கள், நடக்க முடியாத மாற்றுத் திறனாளிகளை ஆட்டோ மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்யும்படி வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து இன்று வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பேருந்து நிறுத்தத்தில் இருந்து வயதானவர்கள், நடக்க முடியாத மாற்றுத் திறனாளிகளை ஆட்டோ மூலம் அழைத்துச் செல்லும் பணி தொடங்கப்பட்டது.

ஆட்சியர் அலுவலக பேருந்து நிறுத்தத்திலிருந்து 2 ஆட்டோக்கள் மூலம் வயதானவர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரை ஆட்சியர் அலுவலக வாசல் வரை அழைத்துச் செல்லப்பட்டனர். இதுகுறித்து, கரூர் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரி செந்தில் கூறுகையில், திங்கள்கிழமை தோறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறும் போது ஆட்சியர் அலுவலக பேருந்து நிறுத்தத்திலிருந்து முதியவர்கள் மாற்றுத்திறனாளிகளை ஆட்சியர் அலுவலம் வரை அழைத்துச் செல்ல 2 ஆட்டோக்கள் இயங்கும் என்றும் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பணிகளை முடித்த பிறகு மீண்டும் ஆட்டோவில் ஏறி பேருந்து நிறுத்தம் வரை இலவசமாக வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் பயணிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

Updated On: 13 Sep 2021 2:45 PM GMT

Related News