சகோதரத்துவத்தை வளர்ப்பதே இன்றைய காலத்தின் தேவையாகும்: ஸ்டாலின் குணசேகரன்
மக்கள் சிந்தனைப் பேரவையின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய தலைவர் ஸ்டாலின் குணசேகரன்.
தமிழர்களுக்குள் சகோதரத்துவத்தையும் மனிதநேயத்தையும் வளர்ப்பதே இன்றைய முக்கியத் தேவையாகும் என்று மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேசியுள்ளார்.
மக்கள் சிந்தனைப் பேரவையின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் ஈரோடு மாணிக்கம்பாளையம், பாரதி அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்கள் சிந்தனைப் பேரவையின் மாநிலத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேசியதாவது:- போதைப் பொருட்கள் பயன்பாட்டால் உருவாகிவரும் சமூக சீர்கேடு குறித்து பொறுப்புள்ள குடிமக்கள் அனைவரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய தருணம் இது. இளைஞர்கள், மாணவர்கள் இவற்றிற்கு எவ்வகையிலும் ஆட்படாமல் இருக்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் அத்திசை நோக்கிச் சிந்திக்கவும் செயல்படவும் மக்களைப் பொதுநோக்கில் சமூக உணர்வுடன் ஒருங்கினைப்பது இன்றைய காலத்தின் தேவையாகும்.
திரைப்படம் மிகவும் சக்திவாய்ந்த சாதனம். சமூகம் சார்ந்த, குடும்ப மேம்பாட்டை வலியுறுத்தும் சில திரைப்படங்கள் வருவதை வரவேற்க வேண்டும். அதே சமயத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ வன்முறைக் கலாச்சாரத்தை இளைஞர்கள் மனதில் விதைக்கும் சில திரைப்படங்கள் சமீபத்தில் வெளிவருவது கவலைதரத் தக்கதாகும். மக்களின் அன்றாட வாழ்க்கையில் தமிழ் மண்ணைப் பொறுத்தவரையில் துப்பாக்கிச் சத்தம் எங்கும் கேட்பதில்லை. அத்தகைய சூழலில் சில திரைப்படங்களில் துப்பாக்கிகளே அதிகம் பேசுகிற காட்சிகள் வலுவான தாக்கத்தை உருவாக்கும் அளவுக்கு காட்டப்படுகின்றன.
சாதி, மதப் பிரிவினைகள், அதனால் ஏற்படும் சச்சரவுகள், சண்டைகள் முழுமையாகத் தவிர்க்கப்பட வேண்டியவை. சகோதரச் சிந்தனை எல்லா இடங்களிலும் எல்லோர் மனங்களிலும் விதைக்கப்பட வேண்டியவை என்று பேசினார். தொடர்ந்து, பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக பேரவையின் துணைத்தலைவர் பேராசிரியர் விஜயராமலிங்கம் வரவேற்றார். பொதுக்குழு உறுப்பினர் பழனிசாமி நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu