ஹிந்தி நோட்டீசில் சர்ச்சை! தி.மு.க. பிரசாரம் வடமாநிலத்தில் கவனம் பெற்றது
ஹிந்தி நோட்டீசில் சர்ச்சை! தி.மு.க. பிரசாரம் வடமாநிலத்தில் கவனம் பெற்றதுதமிழ் மாநிலத்தில் வடமாநிலத்தவர்களின் ஓட்டுகளை பெறுவதற்காக தி.மு.க. தரப்பினர் ஹிந்தி மொழியில் பிரசார நோட்டீஸ்களை அச்சிட்டு விநியோகித்து வருகின்றனர். வடமாநிலத்தவர்களின் நலன்களை பாதுகாக்கும் கட்சியாக தங்களை காட்டிக்கொள்ளும் வகையில் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஹிந்தி மொழியை எதிர்ப்பதாக கூறிவரும் தி.மு.க., இப்போது வடமாநிலத்தவர்களின் ஓட்டுகளை பெறுவதற்காக ஹிந்தியில் பிரசாரம் செய்வது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. "ஹிந்தியை எதிர்க்கிறோம், ஹிந்தி பேச மாட்டோம், ஹிந்தி தெரியாது போடா, தமிழகத்துக்குள் ஹிந்தியை நுழைய விடமாட்டோம்" என கூறிவந்த கட்சியினர், இப்போது ஹிந்தி மொழியிலேயே வாக்கு சேகரிப்பது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
வடமாநிலத்தவர்களில் 70 சதவீதம் பேர் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, சொந்த குடியிருப்புகள், கடைகள் வைத்துள்ளனர் என்பதுடன், தமிழர்களை விட சிறப்பாக தமிழ் பேசி வாசிக்கும் திறனும் பெற்றுள்ளனர். இருந்தும் இவர்களை தனியாக பிரித்து ஹிந்தி மொழியில் பிரசாரம் செய்வது சமூக ஒற்றுமைக்கு உகந்ததல்ல என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஹிந்தி நோட்டீஸில் தி.மு.க. தலைவர்கள் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், இளங்கோவன், திருமகன் ஈவெரா ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களின் படங்கள் இடம்பெறாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை கூட்டணி கட்சிகளிடையே கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும், வரும் நாட்களில் கூட்டணி உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தேர்தல் வெற்றியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் இத்தகைய நடவடிக்கைகள் நீண்ட கால அரசியல் நலனுக்கு உகந்ததல்ல என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu