ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள்: மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு
சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இன்று (பிப்.1) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை வாக்கு எண்ணும் மையமான சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (பிப்.1) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற பிப்ரவரி 5ம் தேதியும், பதிவான வாக்குகள் எண்ணிக்கை வருகின்ற 8ம் தேதியும் நடைபெறவுள்ளது. ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெறவுள்ளது. வாக்கு பெட்டிகள் வைக்கப்படும் வைப்பறை வாக்கு எண்ணும் அறைகள் முழுமையாக சிசிடிவி கேமராக்கள் மூலம் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணும் அறை, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் வைப்பறைகள், ஊடக மையம், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் இடங்கள், வாகனம் நிறுத்துமிடம், தபால் வாக்குகள் வைப்பறை மற்றும் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் அமருமிடம், மேலும் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஈரோடு மாநகராட்சி ஆணையர் எச்.எஸ்.ஸ்ரீகாந்த், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஹம்மது குதுரத்துல்லா, துணை ஆணையர் தனலட்சுமி, மாநகர பொறியாளர விஜயகுமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தியாகராஜ், வட்டாட்சியர்கள் சிவசங்கர் (தேர்தல்), முத்துகிருஷ்ணன் (ஈரோடு) உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu