அந்தியூர் அருகே பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் ஆட்டை திருடி சென்ற மர்ம நபர்கள்: சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு!

அந்தியூர் அருகே பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் வந்து ஆட்டை திருடிச் சென்றவர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மூலக்கடை அடுத்த ராமகவுண்டன்கொட்டாயை சேர்ந்த குருசாமி மகன் சசிகுமார் (வயது 25). இவர், ஐந்து வெள்ளாடுகளை வளர்த்து வந்தார். பகல் நேரங்களில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றுவிட்டு, வீட்டினருகே உள்ள ரோட்டோரத்தில் கட்டி வைப்பது வழக்கம்.
நேற்றும், பகலில் ரோட்டோரம் ஆடுகளை கட்டி வைத்திருந்தார். மாலை 3 மணிக்கு, அவ்வழியே பைக்கில் வந்த இரண்டு வாலிபர்கள், ரோட்டோரத்தில் கட்டியிருந்த, சுமார் 20 கிலோ எடையுள்ள வெள்ளாட்டை திருடிக் கொண்டு பைக்கில் பறந்தனர்.
சிறிது நேரத்தில் ஆட்டை காணாமல் திடுக்கிட்ட சசிக்குமார், அக்கம் பக்கத்தில் தேடி விசாரித்துள்ளார். அப்போது, அங்கிருந்த சிலர், இரண்டு மர்ம வாலிபர்கள் ஆட்டை பைக்கில் கொண்டு சென்றது பற்றி கூறினர்.
இதையடுத்து, அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் ராமகவுண்டன்கொட்டாயிலிருந்து அந்தியூர் செல்லும் ரோடு மற்றும் வட்டக்காடு, மந்தை வழியாக அந்தியூர் செல்லும் ரோட்டிலுள்ள ‘சிசிடிவி’ கேமாரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, வட்டக்காடு, மந்தை வழியாக உள்ள கேமராக்களில், பைக்கில் ஆட்டை திருடி செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, மர்ம நபர்கள் ஆடு திருடி செல்லும் போட்டோவை சமூக வலைத்தளங்களில் அனுப்பி விசாரித்து வருகின்றனர்.
மேலும், அந்தியூரில் உள்ள ஆட்டிறைச்சி கடைகள், வியாபாரிகளிடமும் கூறி ‘அலார்ட்’ செய்யப்பட்டுள்ளது. பட்டப்பகலில் சர்வ சாதாரணமாக ஆடு திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu