ஈரோட்டில் வாக்குப்பதிவு நாளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தின் போது எடுத்த படம்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (பிப்.2) நடைபெற்றது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்குப்பதிவு நாள் மற்றும் அதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய ஆயத்தப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் அஜய் குமார் குப்தா, தேர்தல் செலவின பார்வையாளர் தினேஷ் குமார் ஜாங்கிட், தேர்தல் காவல் பார்வையாளர் சந்தனா தீப்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் பொறுப்பு அலுவலர்கள் வாக்குப்பதிவு நாள் மற்றும் அதற்கு முன்னரே கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் அனைத்து பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து, தேர்தல் காவல் பார்வையாளர் சந்தனா தீப்தி முன்னிலையில் வாக்குப்பதிவு நாளான வரும் 5ம் தேதி வாக்குச்சாவடிகளில் காவல் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான பணி ஒதுக்கீட்டினை இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தின் மூலம் கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஈரோடு மாநகராட்சி ஆணையர் எச்.எஸ்.ஸ்ரீகாந்த், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஹம்மது குதுரத்துல்லா, கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) பிரேமலதா, துணை ஆணையர் தனலட்சுமி, மாநகர பொறியாளர் விஜயகுமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தியாகராஜ், வட்டாட்சியர் சிவசங்கர் (தேர்தல்) உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu