தாளவாடி ஒன்றிய கிராம பகுதிகளில் ரூ.2.41 கோடியில் தார் சாலை: ஆட்சியர் ஆய்வு
Erode News, Erode News Today- தாளவாடி தொட்டாபுரத்தில் கதிர் அடிக்கும் களம் அமைக்கும் பணியினை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.
Erode News, Erode News Today- தாளவாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் ரூ.2.41 கோடி மதிப்பீட்டில் புதிய தார்சாலைகள் அமைப்பது தொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம், தாளவாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காளித்திம்பம், மாவனத்தம் மற்றும் ராமரணை ஆகிய கிராம ஊராட்சி பகுதிகளில் ரூ.2.41 கோடி மதிப்பீட்டில் புதிய தார்சாலைகள் அமைப்பது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (4ம் தேதி) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டமானது, பரந்த ஊரகச்சாலைகள் தொகுப்பினை பயன்படுத்த தக்க வகையில், ஏற்கனவே உள்ள சாலைகளை பராமரிக்கவும் புதிய சாலைகள் அமைக்கவும், உகந்த அளவில் நிதியை வழங்குவதும் முக்கிய நோக்கமாகும்.
அந்த வகையில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தாளவாடி ஊராட்சி ஒன்றியம், தலமலை ஊராட்சி காளித்திம்பம் பகுதியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தாளவாடி சாலை முதல் காளிதிம்பம் வரை 2 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, ராமரணை பகுதியில் ரூ.51.45 லட்சம் மதிப்பீட்டில் 1.1 கி.மீ நீளத்திற்கு தார்சாலை அமைத்தல் மற்றும் மாவனத்தம் பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் ரூ.81.86 லட்சம் மதிப்பீட்டில் தாளவாடி திம்பம் சாலை முதல் மாவனத்தம் வரை தார்சாலை அமைத்தல் என ரூ.2.41 கோடி மதிப்பீட்டில் புதிய தார்சாலைகள் அமைப்பது தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, பெஜலட்டி பகுதியில் பழங்குடியினர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ..4.95 லட்சம் மதிப்பீட்டில் 3 வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, பெஜலட்டி அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, வகுப்பறைகள், மாணவர்களின் வருகை பதிவேடு, சமையலறை, கழிப்பறை ஆகியவற்றை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
இதனையடுத்து, காளித்திம்பம் மற்றும் மாவனத்தம் ஆகியப் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், மாவனத்தம் பகுதியில் பாரத பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ.2.40 லட்சம் வீதம் ரூ.7.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதைத் தொடர்ந்து, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலமலை ஊராட்சி மாவனத்தம், தலமலை, இக்கலூர் ஊராட்சி இக்கலூர்-சிக்கஹள்ளி மற்றும் தாளவாடி ஊராட்சி சேசன்நகர் ஆகிய பகுதிகளில் தலா ரூ.3.50 லட்சம் வீதம் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டுதல் மற்றும் பயனாளிகள் தேர்வு செய்யும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், தொட்டாபுரம் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ராகி, சோளம் போன்ற வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு ரூ.11.80 லட்சம் மதிப்பீட்டில் கதிரடிக்கும் களம் அமைக்கப்பட்டு வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, தாளவாடியில் அரசு இருசுழற்சி வீரிய கலப்பின பட்டு முட்டை வித்தகம் மற்றும் சூசைபுரம் பகுதியில் செயிண்ட் ஜோசப் குழந்தைகள் இல்லத்தில் அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளின் போது, காளிதிம்பம், மாவனத்தம், பெஜலட்டி மற்றும் மலை கிராமங்களில் சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் குறித்து கிராம மக்களிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அக்னீஷ்வரன், குகானந்தன், தாளவாடி வட்டாட்சியர் சுப்பிரமணி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu