மத்திய மந்திரி நிதின் கட்கரி கூறிய ஹைட்ரஜன் கார் பற்றி தெரியுமா?

மத்திய மந்திரி நிதின் கட்கரி கூறிய ஹைட்ரஜன் கார் பற்றி தெரியுமா?
X
மத்திய மந்திரி நிதின் கட்கரி கூறிய ஹைட்ரஜன் கார் பற்றியும் அதன் பயன்பாடு பற்றியும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே தான் செல்கிறது. தமிழகத்தில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107க்கும் டீசல் ஒரு லிட்டர் ரூ,97க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மலைப்பிரதேசமான கொடைக்கானலில் டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.100 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7 வரை உயர்த்தப்பட்டு இருப்பதால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரக்கூடிய அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இதே நிலை நீடித்தால் இனி பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைத்துக்கொண்டு மோட்டார் வாகனங்களை மூலையில் நிறுத்திவிட்டு மாட்டு வண்டியையும், சைக்கிளையும் தேட வேண்டிய நிலை தான் ஏற்படும் போல் தெரிகிறது.

உயர்ந்து கொண்டே செல்லும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசு பெட்ரோலிய எரிபொருளுக்கு மாற்று ஏற்பாடாக யோசனைகளை தான் கூறி வருகிறது.

இந்த நிலையில் மத்திய தரைவழிப்போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி இன்று காலை பாராளுமன்றத்திற்கு ஹைட்ரஜன் காரில் வந்து பரபரப்பை ஏற்படுத்தியதோடு இனி இந்தியாவில் ஹைட்ரஜன் தான் எதிர்காலத்தின் எரிபொருள் என்று கூறி இருக்கிறார்.


தனது வீட்டிலிருந்து டொயோட்டா மிராய் எனும் ஹைட்ரஜன் பவர்டு காரில் பார்லிமென்ட்டுக்கு வந்திறங்கிய அவர், ''தண்ணீரில் இருந்து எடுக்கப்படும் ஹைட்ரஜன் கார்கள்தான் இனி இந்தியாவின் எதிர்காலமாக இருக்கப் போகிறது. கிரீன் ஹைட்ரஜனை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கு ஆக வேண்டிய வழிமுறைகளை இந்திய அரசாங்கம் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டது. இறக்குமதி, வேலைவாய்ப்பு என்று ஹைட்ரஜன் உற்பத்தியில் பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது என்றும் ஹைட்ரஜன் கார் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் மேலும் கூறி இருக்கிறார்.

ஆதலால் இந்தியாவில் இனி ஹைட்ரஜன் கார் பயன்பாட்டுக்கு வர உள்ள நிலையில் ஹைட்ரஜன் கார் என்றால் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா?

இந்தியாவில் தனது முதல் ஹைட்ரஜன் காராக மிராய் எனும் காரை டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்து உள்ளது.

பெட்ரோல் டீசல் மற்றும் பேட்டரியால் (எலக்ட்ரிக்) கார் போன்றது தான் இதுவும்.பெட்ரோல் டேங்க் மாதிரி இந்த கார்களிலும் உயர் அழுத்த ஹைட்ரஜன் டேங்க் இருக்கும்.இதில் ஹைட்ரஜன் வாயுவை நிரப்ப 3 முதல் 5 நிமிடங்கள் வரைதான் ஆகும். எனவே, பெட்ரோல்,டீசல் போடுவதைவிட ஹைட்ரஜன் நிரப்புவது ரொம்ப ஈஸி.

ஒரு டேங்க் ஃபுல் பண்ணினால், இதன் சிங்கிள் ரேஞ்ச் 650 கி.மீ என்கிறது டொயோட்டா. ஹைட்ரஜன் கேஸ், இதிலுள்ள ஹை ப்ரஷர் டேங்க்கில் நிரப்பப்படும்போது, அதிலுள்ள ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் ஃப்யூல் செல்லாக மாற்றம் செய்யப்பட்டு, மின்சாரமாக உருவாகி, இதிலுள்ள எலெக்ட்ரிக் மோட்டாருக்கு பவராக அனுப்பும். இந்த எலெக்ட்ரிக் மோட்டார்தான் இந்த காரை இயக்குகிறது.

பெட்ரோல் , டீசல் கார்களில் எக்ஸாஸ்ட்டில் இருந்து புகை வரும். எலெக்ட்ரிக் கார் என்றால் எக்ஸாஸ்ட்டே இருக்காது. ஆனால், இது இரண்டுமே இதில் கிடையாது. IC இன்ஜின் கார்கள் மாதிரி புகையையும் அப்பாது. எலெக்ட்ரிக் கார் மாதிரி பயங்கர சைலன்ட்டாகவும் இருக்காது. இதில் உள்ள சைலன்ஸரில் இருந்து, ஏர்கூலரில் இருந்து வருவது மாதிரி தண்ணீர் வெளியே வரும். இந்தத் தண்ணீரால் சுற்றுச்சூழல் கெடாது. உடலுக்கும் தீங்கில்லை என்கிறார்கள் ஹைட்ரஜன் கார் பயன்பாட்டை ஊக்குவிப்போர்.

மேலும் எரிபொருளான கிரீன் ஹைட்ரஜனை மரங்கள், மரக்கழிவுகள், திடக்கழிவுகள், பயோகேஸ், பயோடீசல், ஹைட்ரோபவர் ஸ்டேஷன், தண்ணீர், ஜியோதெர்மல், காற்று என்று சொல்லப்படும் கடற்கரை அலைகள், சோலார் போன்ற புதுப்பிக்க வல்ல எரிசக்தி மூலமும் தயார் செய்ய முடியும்.

ஹைட்ரஜன் வாயுவால் இயங்கும் டொயோட்டா மிராய் கார்கள் தற்போது ஐரோப்பா, ஜப்பான், அமெரிக்கா போன்ற சில நாடுகளில் மட்டும்தான் விற்பனையில் இருக்கிறது.

மிராயின் செகண்ட் ஜென் மாடலை, கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள தனது தொழிற்சாலையில் தயாரிக்கத் திட்டம் தீட்டியிருக்கிறது டொயோட்டா நிறுவனம். இந்தியாவில் தயாரிக்கப்பட இருக்கும் அந்த ஜப்பான் டொயோட்டா மிராய் காரில், ஃபரிதாபாத்தில் உள்ள இந்தியன் ஆயில் பங்க்கில் ஹைட்ரஜனை நிரப்பி பாராளுமன்றத்திற்கு வந்திறங்கி டாட்டா காட்டியிருக்கிறார் நிதின் கட்கரி.

Tags

Next Story