சென்னை – புதுச்சேரி துறைமுகங்களுக்கிடையே சரக்குப் போக்குவரத்து சேவை தொடக்கம்
சென்னைத் துறைமுகம் – புதுச்சேரி துறைமுகம் இடையே சரக்குப் போக்குவரத்து சேவையை சென்னைத் துறைமுக ஆணையத்தின் தலைவர் சுனில் பாலிவல் இன்று கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
சென்னைத் துறைமுகம் – புதுச்சேரி துறைமுகம் இடையே சரக்குப் போக்குவரத்து சேவை தொடங்கியது. இந்த சேவையை சென்னைத் துறைமுக ஆணையத்தின் தலைவர் சுனில் பாலிவல் இன்று கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின்கீழ் கடந்த 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15-ஆம் தேதி, சென்னைத் துறைமுகம் – புதுச்சேரி துறைமுகம் இடையே சரக்குப் போக்குவரத்து சேவை தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. எனினும் காலநிலை மாற்றம் போன்ற காரணங்களால் உடனடியாக இந்த சேவை தொடங்கப்படவில்லை.
தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த சரக்குப் போக்குவரத்து சேவை மூலம், சுற்றுச்சூழல் மாசடைவதை தடுப்பதோடு, சரக்குகளை கையாள்வதற்கு செலவிடப்படும் தொகை கணிசமாக குறைந்து, இயக்கச் செலவு, சாலையில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும். இதன்மூலம் அதிக அளவில் சரக்குகளை கையாண்டு, நேர மேலாண்மையை மேம்படுத்த முடியும்.
இந்த இரு துறைமுகங்களுக்கு இடையே வாரம் இரண்டு முறை சரக்குப் போக்குவரத்து நடைபெறும். இதனால் சாலை வழியாக கொண்டுவரப்படும் சரக்குப் பெட்டகங்களின் எண்ணிக்கையை விட, கூடுதலாக கொண்டுவர முடியும். அதிகபட்சம் 106 சரக்குப் பெட்டகங்களை ஏற்றிச் செல்ல முடியும் என்றும் இந்த சேவை மூலம் புதுச்சேரி மட்டுமல்லாமல், கடலூர், சேலம், நாமக்கல், திருச்சி ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு இது மிகவும் பயனுள்ளவையாக இருக்கும் என்றும் இந்தத் திட்டம் வரும் காலங்களில் பயணிகள் போக்குவரத்துக்கு உதவிகரமாக இருக்கும் என்றும் சென்னைத் துறைமுக ஆணையத்தின் தலைவர் சுனில் பாலிவல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுனில் பாலிவல், சென்னைத் துறைமுகம் – மதுரவாயல் இடையேயான ஈரடுக்கு மேம்பாலப் பணிகளுக்கான டெண்டர் (ஒப்பந்தப் புள்ளி) வரும் மார்ச் மாதம் 7-ஆம் தேதி கோரப்பட்டு, ஏப்ரல் அல்லது மே மாதங்களில் பணிகள் தொடங்கும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu