கோவை மாநகராட்சி பகுதிகளில் எல்.இ.டி. விளக்கு அமைக்க நிதி ஒதுக்கீடு

கோப்புப்படம்
257.04 சதுர கி.மீ., பரப்பு கொண்ட கோவை மாநகராட்சியில் 18,902 தெருக்கள் உள்ளன. இதில், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த 40 வார்டுகளில், 44,519 தெருவிளக்குகள் தனியார் பங்களிப்புடன் கூடிய பராமரிப்பு திட்டத்திலும், பழைய மாநகராட்சிக்கு உட்பட்ட, 60 வார்டுகளில், 52,715 தெருவிளக்குகள் தனியார் நிறுவனங்கள் மூலமும் பராமரிக்கப்படுகின்றன.
மக்கள் தொகை பெருக்கம், வார்டு எல்லை மாற்றியமைப்பு, புதிதாக குடியிருப்புகள் உருவாக்கம் உள்ளிட்ட காரணங்களால், பல்வேறு இடங்களில், கூடுதலாக தெருவிளக்குகள் அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
புதிதாக உருவான வீதிகளில் விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் செல்ல பெண்கள் அச்சப்படுகின்றனர்; இருட்டை பயன்படுத்தி வழிப்பறி திருட்டு சம்பவங்கள் நடப்பதால் வேலைக்குச் சென்று வரும் பெண்கள் வீடு திரும்புவதற்கு பாதுகாப்பற்ற சூழல் காணப்படுகிறது
இதுகுறித்து மாமன்ற கூட்டங்களில், கவுன்சிலர்கள், மண்டல குழு தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் பேசியதோடு, தெருவிளக்குகள் அமைக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த வலியுறுத்தினர். இதுதொடர்பாக, தமிழக அரசின் கவனத்துக்கு, கோவை மாநகராட்சி கொண்டு சென்றது. அப்போது, 30 மீட்டர் இடைவெளிக்கு ஒரு தெருவிளக்கு வீதம் அமைக்க, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் அலுவலகம் அறிவுரை வழங்கியது.
அதன்படி, மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் எங்கெங்கு தெருவிளக்குகள் அமைக்க வேண்டுமென மாநகராட்சி பட்டியலிட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பியது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் ரூ.19.34 கோடி ஒதுக்கி, நிர்வாக அனுமதி அளித்து, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
1,451 தெருவிளக்குகள் அமைக்க ஒரு பேக்கேஜ், 6,250 தெருவிளக்குகள் அமைக்க இன்னொரு பேக்கேஜ் என, இரண்டாக பிரித்து அனுமதி தரப்பட்டிருக்கிறது. இதற்கு விரைவில் டெண்டர் கோரப்பட்டு, புதிதாக எல்.இ.டி., விளக்குகள் அமைக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் கூறுகையில், எல்.இ.டி., விளக்குகள் பொருத்தும் பணி சீக்கிரமாக முடிந்து விடும். புதிய இடங்களில் கம்பங்கள் நட்டு, ஒயர் இணைப்பு கொடுத்து, விளக்குகள் பொருத்துவதற்கு சில நாட்கள் தேவைப்படும். பெண்டர் இறுதி செய்யப்பட்டு, உத்தரவு கடிதம் வழங்கும் நாளில் இருந்து மூன்று மாதத்துக்குள் தெருவிளக்குகள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu