கோவை சாலைகள் விரைவில் சீராகும்: மாநகராட்சி நம்பிக்கை

கோவை மாநகராட்சி நிதி நிலைமை படுமோசமாக இருந்ததால், பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கக்கூட முடியாத நிலை காணப்பட்டது. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, கோவை மாநகராட்சிக்கு தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தது
இதைத்தொடர்ந்து, சாலை சீரமைப்பு பணிகளுக்காக அமைச்சர் செந்தில்பாலாஜி முயற்சியில், ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டது. தேவை அடிப்படையில், வார்டு வாரியாக வீதி பட்டியல் தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டது.
அதன்படி அரசு தரப்பில் நிதி படிப்படியாக விடுவிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை, 90.78 கோடி ரூபாய் தமிழக அரசு வழங்கியிருக்கிறது. இதில், 10.01 கோடி ரூபாய்க்கான சாலைப்பணிகள் ஏற்கனவே முடிந்து விட்டன. தற்போது ரூ.34.93 கோடிக்கான பணிகள் நடந்து வருகின்றன. ரூ.26 கோடி மதிப்பிலான பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.19.84 கோடிக்கான ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டிருக்கின்றன.
தற்போது, 28.81 கி.மீ., துாரத்துக்கு ரூ.19.42 கோடி செலவில் தார் சாலை அமைப்பதற்கான கருத்துரு அரசின் பரிசீலனையில் இருக்கிறது; சென்னை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் அலுவலகத்தில், பொறியியல் பிரிவினர் சமர்ப்பித்த கோப்புகளை மதிப்பீடு செய்யும் பணி நடந்து வருகிறது.
தற்போது மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட பகுதிகளில், 114 கி.மீ., தொலைவிற்கு மண் சாலையாக உள்ளது. இவற்றையும் தார் சாலையாக மாற்ற மாநகராட்சி திட்ட அறிக்கை தயாரித்து, சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக, 17.19 கி.மீ., துாரத்துக்கு, 9 நிலைகளாக தார் சாலை அமைக்க ரூ.15 கோடி கேட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது..
இது குறித்து மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா கூறுகையில், ''மாநகராட்சி பகுதியில் ரோடு சீரமைப்புக்காக இதுவரை, 90.78 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. சில இடங்களில் பணிகள் முடிந்து விட்டன. இன்னும், ரூ.29.42 கோடி வர இருக்கிறது. இன்னும் சில நாட்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர, சிறப்பு நிதியாக ரூ.10 கோடி கேட்டு கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. சூயஸ் நிறுவனம் குடிநீர் குழாய் பதித்த பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்படும். சாலை அமைக்க அனுமதி பெற்ற இடங்களுக்கு முன்னுரிமை கொடுத்து குழாய் பதிக்கவும், 2023, பிப்ரவரி மாதத்துக்குள், அனைத்து பகுதிகளிலும் குழாய் பதித்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu