/* */

தனிநபர் இடைவெளியுடன் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை மையங்களில் உரம் இருப்பில் உள்ளதாக கலெக்டர் தகவல்.

HIGHLIGHTS

தனிநபர் இடைவெளியுடன் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டம்
X

அரியலூர்மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தனிநபர் இடைவெளியுடன் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.


அரியலூர் மாவட்டத்தில் கொரானோ தொற்று காரணமாக மாதந்தோறும் விவசாயிகள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்று வந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தனிநபர் இடைவெளியுடன் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் இன்று நடைபெற்றது.

அரியலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 954 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டில் இம்மாதம் இது நாள் வரை 715.48 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு தேவையான 668 மெ.டன் யூரியா, 653 மெ.டன் டி.ஏ.பி 663 மெ.டன் பொட்டாஷ் மற்றும் 1984 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை மையங்களில் இருப்பில் உள்ளது.

இதுவரை சான்று பெற்ற நெல் விதைகள், வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் மூலம் 210 மெ.டன், தனியார் விதை விற்பனை மையங்கள் மூலம் 405 மெ.டன் என கூடுதலாக 615 மெ.டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வேளாண்மை விரிவாக்க மையங்களில் 59 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பில் உள்ளது.

மானிய விலையில் நுண்ணீர் பாசனத் திட்டம்: தற்போது பருவமழை குறைவாக கிடைத்து வருவதால் நிலத்தடி நீரின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றாற் போல் வேளாண் துறையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. நிலத்தடி நீரை சிக்கனமாக பயன்படுத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கோடு வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறைகள் மூலம் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசன கருவிகளை அமைக்க விவசாயிகளுக்கு அரசு மானியமாக நமது மாவட்டத்திற்கு ரூ. 7.92 கோடி நிதி இலக்கு ஒதுக்கீடு செய்து பெறப்பட்டுள்ளது.

சிறு, குறு ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் பாசன கருவிகளை தங்களது வயல்களில் நிர்மானித்துக்கொள்ள மானியம் அனுமதிக்கப்பட்டு வருகிறது. 75 சதவீத மானியத்தில் பயன்பெறும் இதர விவசாயிகள் மீதிப் பங்குத் தொகையை வங்கி வரைவோலையாக விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். சிறு, குறு ஆதிதிராவிட விவசாயிகள் வருவாய்த்துறையில் சான்று பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெற்றிட சொந்த நிலத்தில் பயிர் சாகுபடி செய்து வருவதற்கான சிட்டா மற்றும் அடங்கல், வயல் வரைபடம் மற்றும் மின் இணைப்புடன் நீர் ஆதாரம் உள்ளமைக்கான சான்றுகளுடன் குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்ற இதர ஆவணங்களுடன் சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் விவசாயிகள் நேரடியாக கலந்துகொண்டு வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்பொறியியல் துறை, மின்சாரத்துறை, கால்நடைத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் கூட்டுறவுத்துறை தொடர்பான கோரிக்கைகள் விவசாயிகளால் எழுப்பப்பட்டது. இதில் துறைவாரியாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்தனர். மேலும் விவசாயிகள் அளித்த மனுவிற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க அனைத்து துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி அறிவுரை வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், வேளாண்மை இணை இயக்குநர், வேளாண்மை துணை இயக்குநர்கள், செயற்பொறியாளார் தமிழ்நாடு மின்சாரவாரியம் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 30 Sep 2021 1:49 PM GMT

Related News