அழைத்தால் காவலாய் வரும் அடுக்கு சுடலைமாடன்..
![Adukku Sudalai Madan Story Adukku Sudalai Madan Story](https://www.nativenews.in/h-upload/2021/07/08/1158849-sudalai.webp)
Adukku Sudalai Madan Story
Adukku Sudalai Madan Story-திருநெல்வேலி டவுனில் உள்ளது அடுக்கு சுடலைமாடன் கோயில். இக்கோயிலில் அய்யன் சுடலைமாடன் பீடம், 21 படிகள் கொண்டு அடுக்கடுக்காக பிரமிடு போன்ற அமைப்புடன் உள்ளதால் அடுக்குச்சுடலை என்ற பெயருடன் பக்தர்கள் அழைத்து வருகின்றனர். அடுக்குச்சுடலை தன்னை வணங்கி வரும் அடியவர்கள் அழைத்தால் காவலாய் வருகிறார். திருநெல்வேலி மேலநத்தம் அக்னீஸ்வரர் கோயிலில் சுமார் 7 தலைமுறைக்கு முன்பு தர்மகர்த்தாவாக இருந்த சாவடி சுப்பிரமணியபிள்ளை, தான் கட்டிவரும் வீட்டுக்கு தச்சுவேலைக்காக உயர்தர மரங்களை வெட்டிவர இருபதுக்கும் மேற்பட்ட ஆட்களை அழைத்துக் கொண்டு ஆரியங்காவு மலைக்கு சென்றார்.
மரத்தை வெட்டும் முன்பு முத்துசாமி ஆசாரி, ''ஐயா, மாடன் முதலான 21 பந்தி தேவதைகளுக்கு பூஜை செய்து தடியங்கா பலி கொடுக்கவேண்டும்'' என்று கூறியதற்கு அதெல்லாம் ''சுடலைமாடன் காவலுக்குட்பட்ட காக்காச்சிமலை, கண்ணாடிச் சோலை மலைகளில் வெட்டும் போதுதான் பலி கொடுக்கணும். இங்கெல்லாம் வேண்டாம். மரத்த வெட்டச்சொல்லுங்க ஆசாரி,'' என்று உத்தரவிட, அதன்படி மரத்தை தொழிலாளர்கள் வெட்டிக்கொண்டு வந்தனர். வரும் வழியில் பல இன்னல்களை அவர்களுக்கு உருவாக்கினார் மரத்துடன் வந்த மாயாண்டி சுடலை. எல்லாவற்றையும் அக்னீஸ்வரர் நாமத்தை அழைத்து மீண்டு வந்தார் சாவடி சுப்பிரமணிய பிள்ளை. வீட்டிற்கு வந்த மறுநாள் முதல் அவருக்கு உடல்நலம் குன்றியது.
வைத்தியரை வரவழைத்து பார்த்தும் சீராகவில்லை. இரண்டாவது நாள் அவரது வீட்டின் முன் நின்றுகொண்டு குறத்திப்பெண் குறிசொல்ல தொடங்கினாள், ''ஐயா, மகாராசா, மரத்தோட வந்திருக்கும் மாடன், பூடம் வச்சு பூச கேக்கான். செஞ்சு கொடுத்தா, துணையிருப்பான். செல்வம் சேர வப்பான், உடம்புக்கும் உசுருக்கும் பங்கம் வராம பாத்து நிப்பான்'' என்றாள். வீட்டிலிருந்தபடி அதைக்கேட்ட சாவடி சுப்பிரமணியபிள்ளை, உடனிருந்த மைத்துனரிடம், ''ஏ, மாப்ளே வெள்ளிக்கிழமை சாய்ந்திரம் நல்ல ஜோலிக்காரன்(மந்திரவாதி) ஒருத்தன கூட்டிட்டு வா, திருநீறு போட்டு பாத்துருவோம்'' என்றார். அதன்படி வெள்ளிக்கிழமை மாலை அவரது மைத்துனர், தச்சநல்லூரிலிருந்து சீவலப்பேரி சுடலைமாடன் அடியார் ஒருவரை அழைத்து வந்தார்.
வீட்டுக்கு வந்த அவர் சுடலையை நினைத்து சுப்பிரமணியிடம் ''ஐயா, இந்த திருநீறு பூசுங்க'' என்று கொடுக்க, அவர் வாங்க முற்படும்போது, '' ஓ... ஓ என்று சத்தமிட்டபடி, நான் சுடலை வந்திருக்கேன், எனக்கு கொடுக்க வேண்டியத கொடுக்காம, என் கோட்டையில இருந்த மரங்களை நீ வெட்டி வந்திருக்க, என் கோட்டையில உள்ளத திருப்பிக்கொடு, இல்ல எனக்கு உன் இருப்பிடத்தில இடம் கொடு'' என்றார். பதிலுரைத்த சாவடி சுப்பிரமணியபிள்ளை, ''நாங்க சைவ சித்தாந்தத்தை கடைபிடிக்கிறவங்க, என்னால உனக்கு கோயில கட்டி பலி கொடுத்து படையல் போட முடியாது'' என்றார். ''உன்னால் என்ன முடியுமோ அத செய்'' என்றார் சுடலை. ''அப்படியானால் நான் சைவ படையல் இட்டுத்தான் பூஜை செய்வேன்.
அதை ஏத்துக்கணும், நாலுமுக்கு சந்தியானாலும், நாளு, கிழமை பாக்காம, நேரம் காலம் தெரியாம என் ஊரு சனங்க வருவாங்க, போவாங்க, அவங்களுக்கு உன்னால எதுவும் ஆக கூடாது'' என்று வரம் கேட்டார். அப்போது சுடலை, ''சரிப்பா, நீ, சொன்னது போலவே நடக்கட்டும். எனக்கு ஏணி வைத்து மாலை சாத்தும் எட்டாத பீடம் வேண்டும். பாகற்காய் தவித்து ஏனைய காய்களில் எனக்கு சமையல் செய்து ஒரு கோட்ட அரிசி பொங்கி, ஒரே படப்பா போடணும்.
அஞ்சி நிற்பவர்களுக்கு அருள் கொடுப்பேன், என்னை நம்பும் பக்தர்களை வஞ்சிக்கும் நபர்களை நெஞ்ச கிளறி உதிரம் குடிப்பேன். சத்தியம் தவறி நடப்பவர்களுக்கு சங்கடம் கொடுப்பேன். பொய் சத்தியம் செய்வோருக்கு புடதியில் அடித்து பொண மாக்குவேன்'' என்று கூறிக்கொண்டே போக, அமைதியாக இருந்தார் சாவடி சுப்பிரமணியபிள்ளை. உடனே சுடலை ''ம்...ம் என்ன யோசனை, பயப்படதே, என் அப்பனை கை தொழும் நீ, அவராகவே என்னை பாவித்து வழிபடு. ஆங்கார மிக்க நான், உன்னிடத்தில் சாந்த ரூபமாக சிவ சுடலையாக நிற்பேன்'' என்றதும், சரி, பூடம் அமைச்சு கோயில கட்டி கும்பிடுறேன்.
உருண்ட விழியும், திரண்ட தேகத்தோடும், முறுக்கு மீசை முகத்தோடும், வீச்சருவா கரத்தோடும், விரிசடையும், வீர பல்லுடன் உருவ சிலையோ, முகமோ பூடத்தில் வைக்க மாட்டேன். சத்தியமான தெய்வம் நீ, எனக்கு பொறக்கும் சந்ததிக்கும் தீங்கேதும் நேராமல் காத்தருள வேண்டும். உன் பெயரச் சொல்லி நான் வாக்குறுதிகொடுத்தாலோ, தீர்வு சொன்னாலோ அது நடந்தேற வேண்டும். உன் பேர சொல்லி கொடுக்கும் திருநீறு மருந்தாக வேண்டும். அது பிணி தீர்க்க வேண்டும். என்று சாவடி சுப்பிரமணிய பிள்ளை கூற, அதை ஏற்றுக்கொண்ட சுடலை உன் எண்ணப்படி அனைத்தும் நடந்தேறும் என்றார். இதைகூறியபடி கால்கள் மடக்கி அமர்ந்திருந்த சுடலைமாடன் அருள் வந்து இறங்கிய அந்த நபர், அப்படியே சுவரில் சாய்ந்தார்.
சில நிமிடங்கள் கடந்து ஐயா, என்ன நடந்துன்னு தெரியல, கொஞ்ச நேரத்தில போதமில்லாம ஆயிட்டேன் என்னை மன்னிச்சிருங்க, நான் கிளம்புறேன் உங்களுக்கு சொல்லுறதுக்கு கணக்கு தென்படல என்று கூறினார். உடனே சாவடி சுப்பிரமணியபிள்ளை, ஐயா, நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும். சாமி, நீங்க போய் என்னை பாத்து ஐயான்னு சொல்லுகேளே, ஆமா, அந்த சுடலையே உன் மேல இறங்கி, என்கிட்ட பேசிட்டாரு, இத நான் பெரிய பாக்யமா கருதுறேன் என்று கூறிவிட்டு, வந்தவரிடம் வௌ்ளி நாணயங்களை அள்ளிக்கொடுத்து அனுப்பி வைத்தார்.
சுடலையின் கட்டளைப்படி சாவடி சுப்பிரமணிய பிள்ளை, கோயில் கட்டினார். அவரது மகன் கூத்த நயினார்பிள்ளை கோயிலுக்கு மேல் கூரை அமைத்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோயில் பெரிய அளவில் கட்டப்பட்டது. இக்கோயிலில் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை ஆடிமாதம் வளர்பிறையில் வரும் வெள்ளிக்கிழமை கோயில் கொடை விழா நடைபெறுகிறது. இக்கோயிலில் சுடலைக்கு சைவ படையல் மட்டுமே படைக்கப்படுகிறது. அடுக்குச் சுடலை அடி பணியும் அன்பர்களுக்கு அருள் புரிந்து வருகிறார். ஆங்கிலேயர் ஆட்சியில் தற்போதைய நெல்லை டவுன் பகுதியை காவல் காக்கும் பணி செய்த நபர், ஒருமுறை உடல்நிலை சரியில்லை, மேலதிகாரி விடுப்பு கொடுக்கவில்லை, சுகவீனமாக இருந்தவர் வேலைக்கு வந்ததும் தான் அன்றாடம் வழிபட்டு வந்த அடுக்குசுடலையிடம் முறையிட்டார்.
''இன்னைக்கு என்னால, இருந்த இடத்த விட்டு நகர முடியாது. ''எப்பா சுடலை, உனக்கு எம்மேல இரக்கம் இருந்தா, வெள்ளக்கார மேலதிகாரிகிட்ட இருந்து என்ன நீதான் காப்பாத்தணும்'' என்று கூறியவாறு அங்கே தூங்கலானார். நள்ளிரவு நேரம் ஆங்கிலேயே அதிகாரி காவல்காரர்களை சோதனையிட வலம் வந்தார். அந்த நேரம் காவல்காரர் கோயிலில் தூங்கிக்கொண்டிருப்பதை கண்டு விட்டார். நாளையே உனக்கு வேலையை காலி செய்து விடுகிறேன் என்று கூறிவிட்டு, தனது குதிரையில் மேல ரதவீதியை தாண்டும்போது, அங்கே அதே காவலாளி உடையில் ஒருவர் காவல்காத்து கொண்டிருந்தார். உடனே அவர் மீண்டும் கோயில் பகுதிக்கு சென்றார். அங்கே தூங்கிக்கொண்டிருந்த காவலாளியை எழுப்பினார்.
''என்னே, மேன் வேலே பாக்குது.'' என்று கேட்க, ''துர, உடம்பு முடியாம கொஞ்சம் கண்ணசந்திட்டேன்.'' என்றான் காவலாளி. ''அது இல்லே மேன், நீ எனக்கு தெரியாம, உனக்கு பதில் வேற ஆள வேலைக்கு வச்சுருக்கு.'' ''இல்லங்க துரை'' என்று பதறினான். ''ஓகே, எங்கூடே வா, கம் மேன்'' என்று கூறி அழைத்துச் சென்றார். அங்கே காவலாளியைப்போன்றே ஒருவர் காவல் காக்க, இருவரும் மெய் சிலிர்த்துப் போனார்கள். உடனே அந்த காவலாளி அவரை நெருங்க, அவர் மாயமானார். இருவரும் கோயிலுக்கு வந்தனர். அப்போது கோயில் வாசலில் காவலாளிக்கான சீருடை இருந்தது.
உடனே காவலாளி அப்பா, சுடலை எனக்காக காவல் காத்த அய்யா, என்று சத்தமிட்டபடி தனது இரண்டு கைகளை தலைக்கு மேலே தூக்கி வணங்கினார். அந்த ஆங்கிலேய அதிகாரியும் தி. பவர் ஃபுல் காட் என்று கூறி வணங்கினார். அதிலிருந்து இந்த சாமிக்கு போலீஸ்காரர் போன்று அலங்காரம் செய்யப்படுகிறது. இப்பகுதி மக்கள் கனவில் போலீஸ்காரர் வந்தால் அது சுடலை தான் என்று நம்புகின்றனர். இக்கோயில் நெல்லை, டவுன் மேல ரதவீதியில் அமைந்துள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu