ரதசப்தமி விரதத்தின் போது எருக்க இலை கட்டி குளிப்பது ஏன்?
நினைத்த நேரத்தில் உயிர் விடலாம் என்று அவர் பெற்றிருந்த வரமே இப்போது அவருக்கு பெரிய கஷ்டத்தை அளித்துக் கொண்டிருந்தது. உத்தராயணத்தில் உயிர் விடலாம் என்று நினைத்த பீஷ்மர் அர்ஜூனனால் ஏற்படுத்தப்பட்ட அம்புப் படுக்கையின் மீது படுத்திருந்தார்.
மேலும் அவரது தாகத்தை தீர்ப்பதற்காக அர்ஜூனன் நிலத்தில் அம்பை செலுத்தி கங்கையை வரவழைத்துக் கொடுத்தான். இருந்தாலும் காலம் போய்க் கொண்டே இருந்தது. உத்தராயணக் காலம் வந்தும் பீஷ்மரின் உயிர் அவரது உடலை விட்டுப் பிரியவில்லை.
பாண்டவர்கள் கௌரவர்கள் கிருஷ்ணர் என அனைவரும் அவரைச் சூழ்ந்து நின்றனர். பீஷ்மருக்கோ தன் உயிர் இன்னும் பிரியாததை நினைத்து வேதனை. அப்போது அங்கு வந்து சேர்ந்தார் வேத வியாசர். பீஷ்மர் வேதவியாசரிடம் என்னுடைய உயிர் ஏன் இன்னும் போகவில்லை. நான் செய்த பாவம் என்ன என்று கேட்டார். அதற்கு வியாசர், பீஷ்மரே ஒருவர் தன் எண்ணம் சொல் செயலால் செய்வது மட்டும் தீமை என்றில்லை.
தன் கண் முன் பிறர் செய்யும் தீமைகளை தடுக்காமல் இருப்பதும் கூட ஒரு வகையில் பாவம் தான். அதற்கான தண்டனையை யாராக இருந்தாலும் அனுபவித்து தான் ஆக வேண்டும். பீஷ்மருக்கு இப்போது புரிந்து விட்டது. தன்னுடைய இந்த வேதனைக்கான காரணம். திரௌபதியை துச்சாதனன் துகில் உரித்த போது சபையில் இருந்த அனைவரிடமும் தன்னை காப்பாற்றும்படி மன்றாடினாள். அங்கு இருந்த அனைவரும் அங்கு ஒரு பெண்ணுக்கு நடக்கும் கொடுமையைக் கண்டும் காணாதது போல் இருந்தனர். அவர்களில் பீஷ்மரும் ஒருவர்.
அந்த பாவம் தான் தனக்கான இந்த தண்டனை என்பதை உணர்ந்த பீஷ்மர் இதற்கு என்ன பிராயச்சித்தம் என்று வியாசரிடம் கேட்டார். பீஷ்மா ஒருவர் தன் பாவத்தை உணரும் போதே அது அகன்று விடுகிறது. தவறு செய்துவிட்டோம் என்று நீ உணர்ந்ததால் உன்னுடைய பாவம் இப்போது அகன்று விட்டது.
ஆனாலும் திரௌபதி சபையில் கூக்குரலிட்டு கதறியபோது கேட்காதது போல் இருந்த உன் செவிகள் பார்த்தும் பாராதது போல் இருந்த உன் கண்கள் தவறை தட்டிக் கேட்காத வாய் அசாத்திய வலிமை இருந்தும் தினவெடுக்காத உன் தோள்கள் வாளை பயன்படுத்தாத உன் கைகள் இருக்கையில் இருந்து எழும்பாத உன் கால்கள் தவறைப் பற்றி யோசிக்காத உன் மூளை இருக்கும் தலை ஆகியவற்றுக்கு தண்டனை கிடைத்தே தீர வேண்டும். அதுதான் விதி என்றார் வியாசர்.
இதனை கேட்ட பீஷ்மர் வியாசரிடம் தவறு செய்த இந்த உடலை பொசுக்கக் கூடிய வல்லமை படைத்தவர் சூரிய பகவான் ஒருவரே. சூரிய சக்தியை பிழிந்து தவறு செய்த இந்த என் உடலுக்கு தாருங்கள் என்று துக்கத்தோடு வியாசரை வேண்டினார். வியாசர் எருக்க இலை ஒன்றைக் காட்டி பீஷ்மா எருக்க இலை சூரியனுக்கு உகந்தது. இதன் பெயர் அர்க்க பத்ரம். அர்க்கம் என்றாலே சூரியன் என்று பொருள். சூரியனின் சாரம் இதில் உள்ளது. சந்திரனைத் தலையில் சூடிக் கொண்ட எம்பெருமான் சூரியனின் உருவமான எருக்க இலையையும் இதன் காரணமாகவே சூடிக் கொண்டிருக்கிறார். ஆகவே இந்த இலைகளால் உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கிறேன். அதன் மூலம் உன் உடல் வெப்பம் சாந்தியாகும் என்றார். அதன்பிறகே பீஷ்மர் தியானத்தில் மூழ்கி ஏகாதசி அன்று தன் உயிரை உடலில் இருந்து விடுவித்துக் கொள்கிறார். அவருக்குச் சிரார்த்தம் போன்றவற்றை செய்ய யாருமில்லாமல் திருமணம் ஆகாத நைஷ்டிக பிரம்மச்சாரியாக உயிர் நீத்ததை நினைத்து வருந்திய யுதிஷ்டிரரிடம் வியாசர் ஒழுக்கமே தவறாத பிரம்மச்சாரிக்கும் துறவிக்கும் பிதுர்க்கடன் என்பது அவசியமே இல்லை. அவர்கள் மேம்பட்ட ஒரு நிலைக்குப் போய்விடுகிறார்கள் என்றாலும் உன் வருத்தத்துக்காக இனி இந்த பாரத தேசமே பீஷ்மனுக்காக நீர்க்கடன் அளிக்கும். ரதசப்தமி அன்று தங்கள் உடலில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளுவதோடு பீஷ்மருக்கும் நீர்க்கடன் அளித்த புண்ணியம் அவர்களுக்குக் கிடைக்கும் என்று ஆறுதல் சொன்னார். இதனால்தான் ரதசப்தமி அன்று விரதம் இருப்பதும் தலையிலும், கண்கள், செவிகள், கை, கால், தோள்களில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் முறை இருந்து வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu