150 ஏக்கர் பருத்தி, மக்காச்சோளம் சேதம்: ஏரி தண்ணீர் வயலில் புகுந்து வடியாததால் பெரும் இழப்பு!
நாமக்கல் : பழையபாளையம் வடக்கு ஏரிக்கரை, நீலக்கடக்கால் பகுதியில் ஏரி நிரம்பி தண்ணீர் வயல்களில் புகுந்தது. ஆனால், அந்த தண்ணீர் இதுவரை வடியாததால், 150 ஏக்கரில் பயிரிட்டிருந்த பருத்தி, மக்காச்சோளம், சோளப்பயிர்கள் வீணாகி வருகின்றன.
பழையபாளையத்தில் மிகப்பெரிய ஏரி
சேந்தமங்கலம் அருகே, பழையபாளையத்தில் மிகப்பெரிய ஏரி உள்ளது. கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன், கொல்லிமலையில் பெய்த கன மழையால், இந்த ஏரி நிரம்பி, வடிகால் வழியாக துாசூர் ஏரிக்கு சென்றது. அதன்பின், கடந்த, 2 ஆண்டாக கொல்லிமலையில் போதிய மலை இல்லாததால் வறண்டு காணப்பட்டது.
கடந்த மாதம் பெய்த மழையால் ஏரி நிரம்பியது
கடந்த மாதம் கொல்லிமலையில் பெய்த அதிகன மழையால், காட்டாற்று வெள்ளம் உருவாகி, சேந்தமங்கலம், துத்திக்குளம், பாப்பன்குளம் ஏரிகள் நிரம்பி, பழையபாளையம் ஏரிக்கு தண்ணீர் வந்தது. இதனால், கடந்த, 2 ஆண்டாக வறண்டிருந்த ஏரி, கிடுகிடுவென நிரம்பியது. இதனால், இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்த நிலையில், ஏரியின் வடக்கு பகுதி விவசாயிகள் மட்டும் கவலையடைந்தனர்.
ஏரியின் வடக்கு பகுதியில் பாலம் தடை
இந்த ஏரியின் வடக்கு பகுதி, முத்துக்காப்பட்டி பஞ்., நீலக்கடக்கால் பகுதியில் உள்ளது. ஏரி நிரம்பியதும் தண்ணீர் வெளியேற, பழையபாளையத்தில் ஒரு வடிகாலும், நீலக்கடக்கால் என்ற இடத்தில் ஒரு வடிகாலும் உள்ளது. பழையபாளையத்தில் உள்ள வடிகால் வழியாக தண்ணீர் செல்லும் இடத்தில் பாலம் கட்டப்பட்டது. இதனால் பாலத்தின் அடியில் தடையின்றி தண்ணீர் செல்கிறது.
தண்ணீர் வயல்களில் புகுந்த நிலை
முத்துக்காப்பட்டி பஞ்., நீலக்கடக்கால் என்ற இடத்தில், சில ஆண்டுகளுக்கு முன், பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மேடான பகுதியில் பாலம் கட்டப்பட்டது. இதனால், ஏரி தண்ணீர் வடிந்து செல்ல வழியின்றி, அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்தது. 60 ஏக்கரில் பயிரிட்டிருந்த மக்காச்சோள வயலில், முழங்கால் அளவிற்கு தற்போது வரை தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. 20 ஏக்கரில் பருத்தி, 25 ஏக்கரில் சோளம் என, 150 ஏக்கரில் பயிரிட்டிருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடும் அவதி
இதனால் இப்பகுதி விவசாயிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து, ஒரு விவசாயி கூறியதாவது, இங்கு தண்ணீரில் மூழ்கியுள்ள, 150 ஏக்கரும் பட்டா நிலம் தான். கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன் ஏரி நிரம்பியபோது, பாலம் வழியாக தண்ணீர் செல்ல வழியின்றி மழைநீர் வயல்களில் புகுந்தது. இதனால், விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.
விவசாயிகள் எதிர்பார்க்கும் நடவடிக்கை
தற்போதும் அதேபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது. பாலம் கட்டியபோது, 2 அடி ஆழத்திற்கு மண் வெட்டி விட்டிருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது. வரும் காலங்களில் ஏரி நிரம்பினால் இதுபோன்று நடக்காமல் இருக்க, பாலத்தின் அடியில் தண்ணீர் செல்லும் வகையில் சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu