ஜோதிட ரகசியம்: மஹாளய பட்சம் ஏன் தேய்பிறையில் வருகிறது தெரியுமா?
புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சாரிக்கிறார். கன்னி இராசிக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. நாம் வாழும் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. நம்மையும் சேர்த்து, சூரிய மண்டலம், நமது பக்கத்தில் இருக்கும் சில நட்சத்திரக் கூட்டங்களுடன் ஒரு மையத்தைச் சுற்றி வருகிறது. அந்த மையத்தைப் போல பல மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் ஒருங்கிணைந்து கன்னி இராசியை மையமாகக் கொண்டுதான் சுற்றி வருகின்றன.
மனித வாழ்க்கையை எடுத்துக் கொண்டால், உடலை விட்டு பிரிந்த உயிர், இந்த கன்னிராசி இருக்கும் மண்டலத்தில் ஒடுங்குகிறது என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.
எனவே தான் , கன்னி ராசி இருக்கும் மண்டலத்தைப் பித்ருயானம் (பித்ருக்களின் வழி) என்பார்கள். இந்த கன்னிராசி தென் திசையில் இருக்கிறது. எனவே தான் அந்தத் திசையை நோக்கிப் பித்ரு காரியம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.
அந்தத் திசையில் சூரியன் சஞ்சாரிக்கும் போது விசேஷமாகவே பித்ரு காரியம் செய்கிறோம். இறந்தவர்களது திதியன்று சிரார்த்தம் செய்கிறோம். அது அந்த ஒரு திதியில் மட்டுமே செய்யப்படுகிறது.
அப்படி இருக்க இந்த பித்ரு பட்சம் என்பது 15 நாட்கள் கொண்ட தேய்பிறை காலம் முழுவதும் செய்யப்படுவது ஏன்? இதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், நாம் பித்ருக்களின் காலக் கணக்கைப் பார்க்க வேண்டும்.
ஒருவன் 30 வருடங்களுக்கு தனது பித்ருக்களாகிய முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்தால், பித்ருக்களின் வாழ்நாளில் ஒரு வருடத்துக்கு மட்டுமே அந்த சிரார்த்தம் கிடைத்தது என்று ஆகும்.
அவ்வளவு காலமாக ஒருவர் சிரார்த்தம் செய்வது மிக மிக மிக அபூர்வம். அதனால், பித்ரு உலகமான கன்னிராசி இருக்கும் மண்டலத்துடன் சூரியன் இணையும் புரட்டாசி மாதத்தில் ஒரு முழு பட்சத்தையும் (15 நாட்கள்) பித்ருக்களுக்கு வழிபாடு செய்வதற்காக ஒதுக்கியுள்ளனர் நமது முன்னோர்கள்.
தேய்பிறையை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்றால், அதுதான் பித்ருக்களின் பகல் காலம் ஆகும். அவர்கள் விழித்திருக்கும் அந்தக் காலகட்டத்தில் புரட்டாசி மாத பித்ரு பட்சத்தில் அவர்கள் உலகை நோக்கி நாம் அவர்களை வழிபடுகிறோம்.
இந்த பட்சத்தில் நாம் செய்யும் வழிபாடு, சிரார்த்தம் செய்யப்படாத அனைத்து பித்ருக்களையும் சென்றடைகிறது. இவ்வாறு அனைத்து ஜீவன்களையும் அரவணைக்கும் விதமாக நம் முன்னோர்களால் நமக்குத் தரப்பட்டிருக்கிறது.
இதனால் தான் ஒருவன் புரட்டாசி அமாவாசையன்று அன்னதானம் செய்தால், 12 ஆண்டுகளுக்கு அன்னதானம் செய்த புண்ணியத்தை அடைகிறான். சிரத்தையாகவும், அக்கறையுடனும், எவனொருவன் பித்ரூ கடமைகளை சரியாக செய்வானோ அவனுக்கும் அவன் தலை முறைக்கும் முன்னோர்களின் பரிபூரண ஆசியை பெறுவார்கள். அந்த ஆசியால் உங்களுடைய நீண்டகால பல பிரச்னைகளுக்கு சரியான தீர்வுகளை கிடைக்க பெறுவீர்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu