ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பிரசாரம் முடிவுக்கு, நாளை பரபரப்பான வாக்குப்பதிவு..!
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் கடந்த ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதைத் தொடர்ந்து, அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 7- ஆம் தேதி அறிவித்தது.
வேட்புமனு தாக்கல்
கடந்த மாதம் 10-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கி.சீதாலட்சுமி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 46 பேர் போட்டியிடுகின்றனர்.
அரசியல் கட்சி வேட்பாளர்
♦ திமுக வி.சி.சந்திரகுமார்
♦ நாம் தமிழர் கட்சி மா.கி.சீதாலட்சுமி
♦ சுயேச்சை 46 பேர்
பிரசாரம்
திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாருக்கு ஆதரவாக அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் 33 வார்டுகளிலும் கடந்த 15-ஆம் தேதி முதல் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.
திமுக வேட்பாளார் வி.சி. சந்திரகுமார் பிரசாரம்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமிக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 24-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை ஈரோட்டில் முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டார்.
வாக்காளர்கள் விபரம்
இந்த தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 128 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 17 ஆயிரத்து 381 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 37 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
வாக்காளர் பிரிவு எண்ணிக்கை
♦ ஆண் 1,10,128
♦ பெண் 1,17,381
♦ மூன்றாம் பாலினம் 37
மொத்தம் 2,27,546
தேர்தல் அலுவலர் மாற்றம்
ஈரோடு மாநகராட்சி ஆணையர் என்.மணீஷ் மாற்றப்பட்டு, ஒசூர் மாநகராட்சி ஆணையரான ஸ்ரீகாந்த் தேர்தல் நடத்தும் அலுவலராக கடந்த 22- ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார்.
சீமான் கடும் விமர்சனம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோட்டில் 11 நாட்கள் தங்கியிருந்து பிரசாரம் செய்தார். அப்போது, பெரியார், ஈ.வெ.ரா., திராவிட சித்தாந்தம் ஆகியவை குறித்தும், முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி. கனிமொழி ஆகியோர் குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
சீமான் பிரசாரம்
தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக சீமான் மீது 7 வழக்குகளும், வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி மீது 13 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அமைதி காத்த திமுக
2023-இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் அமைச்சர்கள் பெரும்பாலானோர் ஈரோட்டில் முகாமிட்டு தேர்தல் பணியாற்றினர். இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன.
இந்த இடைத்தேர்தலில் திமுகவில் அமைச்சர் சு.முத்துசாமியைத் தவிர வேறு எந்த அமைச்சரும் பிரசாரத்துக்கு வரவில்லை. ஆனால், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த சில கட்சி நிர்வாகிகள் ஈரோட்டில் முகாமிட்டு தேர்தல் பணிகளைக் கவனித்தனர்.
திமுக ஆதரவு கோரும் அமைச்சர் சு.முத்துசாமி
பெரியார் ஈவெரா மற்றும் திமுக தலைவர்களை சீமான் கடுமையான விமர்சனம் செய்தபோதும் திமுக தரப்பில் எந்தவிதமான எதிர்வினையும் இல்லை. தேர்தல் முடியும் வரை சீமான் விமர்சனத்துக்கு பதில் செல்லப்போவதில்லை என அமைச்சர் சு.முத்துசாமி பிரசாரத்தின்போது தெரிவித்தார்.
பிரசாரம் நிறைவு
திங்கள்கிழமை மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. அரசியல் கட்சியினர் தங்களது இறுதி கட்ட பிரசாரத்தை முடித்து கொண்டு தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பினர்.
வாக்குப் பதிவு
வாக்குப் பதிவு புதன்கிழமை (பிப்ரவரி 5) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மொத்தம் 237 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக, நாம் தமிழர் கட்சி ஆகியன பிரசாரத்தில் முனைப்புடன் ஈடுபட்டன. முக்கிய கட்சிகளான அதிமுக, பாஜக போட்டியிடாததால் திமுக-நாம் தமிழர் கட்சி இடையே நேரடி போட்டி நிலவுகிறது. வாக்குப்பதிவு விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் சிறப்பான வாக்குப் பதிவு நடைபெறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu