செல்வம் கொட்டணுமா..? லட்சுமி குபேர பூஜை செய்ங்க..! எப்படி செய்யணும்..? தெரிஞ்சுக்கங்க..!
Lakshmi Pooja in Tamil
Lakshmi Pooja in Tamil-பொதுவாகவே எல்லோரும் பணம் மற்றும் பொருளோடு வசதியாக வாழ்வதற்கே விரும்புவார்கள். ஆனால் அந்த பாக்கியம் எல்லோருக்கும் வாய்க்காது. இருப்பினும் சில பூஜைகள் செய்வதன் மூலமாக லட்சுமியின் பார்வை கிடைத்து நல்ல வாழ்க்கை வாழலாம் என்பது நம்பிக்கையாக இருந்துவருகிறது.
அந்த வகையில் லட்சுமி குபேர பூஜை எப்படி? எப்போது செய்வது என்பது பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம், வாங்க.
ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதத்தில் வரும் தீபாவளி அமாவாசை அன்று மாலை நேரத்தில் குபேரரையும், மகாலக்ஷ்மியையும் வணங்கி வழிபடுவதே லட்சுமி குபேர பூஜையாகும். ஒவ்வொரு ஆண்டும் லட்சுமி குபேர பூஜை செய்ய சிறந்த நேரம் குறிப்பிடப்படும். அந்த நல்லநேரம் பார்த்து பூஜைகள் செய்வது உத்தமம்.
குபேரன் தனது செல்வம் அனைத்தையும் இழந்து நின்றபோது சிவபெருமான் குபேரனுக்கு கூறியதுதான் இந்த வழிபாட்டுமுறை.
லட்சுமி தேவியை வணங்கி விரதமிருந்து வழிபட்டால் இழந்த அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்று குபேரனுக்கு சிவபெருமான் வரம் அருளினார். சிவபெருமானின் கூறிய வாக்குக்கு இணங்க குபேரனும் மகாலட்சுமியை வணங்கி விரதமிருந்து வழிபட்டு இழந்த அனைத்து செல்வத்தையும் திரும்ப பெற்றார் என்பது ஆன்மிக வரலாறு.
நாமும் இந்நாளில் செல்வத்தை வழங்கிய மகாலட்சுமியையும், விரதமிருந்து வழிபட்ட குபேரனையும் விரதமிருந்து வணங்கி வழிபட்டால் நம் வாழ்வில் செல்வச் செழிப்பு ஏற்பட்டு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப்பெறும் என்பது நம்பிக்கை.
லட்சுமி குபேர பூஜை செய்யும் முறை
லட்சுமி குபேர பூஜையை எளிய முறையில் செய்து குபேரரின் அருளைப் பெறலாம். லட்சுமி குபேர பூஜை செய்வதற்கு சிறந்த நேரம் மாலை நேரமாகும். மாலை நேரத்தில் 5 மணி முதல் இரவு 8 மணி வரை லட்சுமி குபேர பூஜை செய்து வழிபடலாம்.
லட்சுமி குபேர பூஜை செய்வதற்கு முதலில் பூஜை செய்யப் போகும் இடத்தை நன்கு சுத்தம் செய்துக்கொள்ள வேண்டும்.
பின் ஒரு மனைப்பலகையை வைத்துக் கொள்ள வேண்டும்.
பூஜையை ஒரு மனைப்பலகையின் மீது தான் செய்ய வேண்டும். வெறும் தரையில் செய்வது சிறந்தது அல்ல.
மனைப்பலகை முழுவதும் மஞ்சள் பூசி, பின் அரிசி மாவினால் கோலமிட வேண்டும்.
பின்னர் மகாலட்சுமி அம்மையின் படம் அல்லது சிலை இருந்தால் அதை வைத்துக்கொள்ளலாம்.
பின் குபேரர் தனது சம்பத்துகளுடன் இருக்கும் படம் அல்லது சிலையை வைத்துக் கொள்ள வேண்டும்.
மகாலட்சுமியிடம் குபேரர் விரதமிருந்து வழிபட காரணமாக இருந்த ஐயன் சிவபெருமானையும் விட்டுவிடக்கூடாது. சிவனையும் நாம் பூஜையில் வைக்க வேண்டும்.
நாம் எந்த ஒரு செயலை செய்வதற்கும் முன் வழிபட வேண்டிய முழுமுதற் கடவுள் விநாயகர் முக்கியமானவராவார். எனவே மஞ்சளில் விநாயகரைப் பிடித்து வைத்து, அவருக்கு திலகமிட்டு விநாயகருக்கு மிகவும் பிடித்தமான அருகம்புல்லை வைக்க வேண்டும்.
பின்னர் அனைத்து தெய்வங்களுக்கும் பூ போட வேண்டும். குபேர பூஜைக்கு குபேர கோலம் மிக மிக முக்கியம். குபேர படத்திற்கு முன்னால் குபேர கோலம் என சொல்லகூடிய கட்டத்தை போட வேண்டும்.
குபேர கட்டம்
குபேர கட்டத்தை போடும்போது கட்டத்தை குங்குமத்தால் போட வேண்டும். எண்களை அரிசிமாவினால் எழுத வேண்டும். கட்டத்தை சுற்றி நான்கு பக்கமும் ஸ்ரீ எனும் மகாலட்சுமி நாமத்தை போட வேண்டும்.
ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு நாணயம் வைக்கும் அளவிற்கு சிறிது இடம் விட்டு கட்டம் அமைக்கவேண்டும்.
பின் கட்டத்தில் ஒரே மாதிரியான 9 நாணயங்கள் ஒவ்வொரு கட்டத்திலும் வைக்க வேண்டும். அதற்கு மஞ்சள், குங்குமம், பூ ஆகியவற்றை வைக்க வேண்டும்.
குபேர கட்டத்தை மறைக்காதவாறு ஒரு வாழை இலையை வைக்க வேண்டும்.
அதன் நடுவில் கொஞ்சம் பச்சரிசி, நவதானியம் இரண்டையும் பரப்பி வைக்க வேண்டும். அதில் ஒரு பித்தளை செம்பினை வைக்க வேண்டும். செம்பின் உள்ளே நீரினை நிரப்பி அதில் ஒரு ஒரு ரூபாய் நாணயத்தை போட வேண்டும். அதில் சந்தனம், பன்னீர், போன்ற வாசனை பொருட்களை சேர்க்க வேண்டும்.
அந்த செம்பின் மீது ஒரு தேங்காயை வைக்க வேண்டும். தேங்காய்க்கு மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். மாவிலை வைக்க வேண்டும். முக்கியமாக வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் வைக்க வேண்டும்.
பிறகு நெய்வேத்தியமாக மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்த பால் பாயாசம், அல்லது வேறு ஏதேனும் ஒரு இனிப்பை வைக்கலாம். தங்கள் வீட்டில் இருக்கும் பணம், நகை போன்றவற்றை வழிபாட்டில் வைக்க வேண்டும்.
நாணயங்கள் இருந்தால் அதையும் ஒரு தட்டில் வைத்துக் கொள்ளலாம். உங்களிடம் குபேர விளக்கு இருந்தால் குபேர விளக்கினை இரு புறமும் ஏற்றி வைக்க வேண்டும். இல்லையென்றால் குத்து விளைக்கினை ஏற்றி வைக்கலாம்.
பூஜைக்கு அர்ச்சனை செய்வதற்காக கொஞ்சம் உதிரி பூக்களும், குங்குமமும் வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது வழிபாட்டினை துவங்கலாம். விளக்கேற்றிய பின் முதலில் விநாயகரை வழிபட வேண்டும். பின் மகாலட்சுமியை வழிபட வேண்டும். மகாலட்சுமி ஸ்தோத்ரம் தெரிந்தால் அதை சொல்லி வழிபடலாம்.
பின்னர் சிவபெருமானை வழிபட வேண்டும்.
பின் குபேரரை வழிபட வேண்டும்.
வழிபாட்டில் வைத்துள்ள நாணயங்களை ஒவ்வொன்றாக எடுத்து லட்சுமி குபேரரின் பாதத்தில் வைத்து எடுத்து நாணயத்தின் ஒலி கேட்கும் வண்ணம் ஒரு தட்டிலோ அல்லது கிண்ணத்திலோ போட வேண்டும்.
பின் தீப தூப ஆராதனை காட்டி லக்ஷ்மி குபேரரை வணங்கி அனைத்து செல்வ வளங்களையும் தருமாறு வேண்டி வழிபட வேண்டும்.
மகாலட்சுமி ஸ்தோத்திரம் தெரியாதவர்கள் “குபேராய நமஹ” “தனபதியே நமஹ” என்று கூறி வழிபடலாம்.
பின் நெய் வேத்தியமாக வைத்தவற்றை அனைவருக்கும் கொடுத்து வாழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும்.
பூஜையில் வைத்து வழிபட்ட நாணயங்களை ஒரு மஞ்சள் துணியில் வைத்து நீங்கள் பணம் சேமித்து வைக்கும் பீரோ அல்லது அலமாரியில் வைத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு வழிபடுவதால் மகாலட்சுமியின் அருள் முழுமையாகக் கிடைத்து வாழ்வில் அனைத்து செல்வங்களும் கிடைத்து வளமோடு வாழலாம்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu