‘ஜனவரியில் புதிய அரசியல் முடிவு’- டாக்டர் கிருஷ்ணசாமி திருச்சியில் பேட்டி

‘ஜனவரியில் புதிய அரசியல் முடிவு’- டாக்டர் கிருஷ்ணசாமி திருச்சியில் பேட்டி
டாக்டர் கிருஷ்ணசாமி.
ஜனவரியில் புதிய அரசியல் முடிவு எடுக்கப்படும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி திருச்சியில் அளித்த பேட்டியில் கூறினார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் நடைபயணம் செய்து வருகிறார்.அவரது நடைபயணம் நேற்று திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ராஜகோபுரம் அருகில் நடந்த நடைபயண பிரச்சார கூட்டத்தில் அண்ணாமலை பேசும் போது தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும் ஸ்ரீரங்கம் கோயில் முன் உள்ள பெரியார் சிலை அகற்றப்படும் என கூறி இருந்தார்.

இது தொடர்பாக இன்று திருச்சி வந்த புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

தமிழ்நாட்டில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் அனைத்தையும் அகற்றுவோம் என்று அண்ணாமலை கூறி இருந்தால் அது சரியாக இருக்கும். மாறாக, தனிப்பட்ட முறையில் பெரியாரின் சிலைகளை அகற்றுவோம் என்பது எதிர் விளைவுகளை உருவாக்கும்.

கோயில் சொத்துக்களை முறையாக பராமரிப்பதில் இந்து சமய அறநிலையத் துறையிலுள்ள குறைபாடுகளை களைய வேண்டுமே தவிர அந்தத் துறையை கலைப்பதோ அல்லது தனியாரிடம் தருவதோ கூடாது.

'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பதற்கேற்ப ஜனவரிக்கு பின் அரசியல் சூழல் மாறும். அதற்கேற்ப புதிய தமிழகம் கட்சியின் அரசியல் முடிவு இருக்கும்.

தென் தமிழகத்தில் சாதிய மோதலை தூண்டும் வகையிலான சம்பவங்கள் சமீபகாலமாக நடைபெறுகிறது. இது திட்டமிட்டு தூண்டப்படுகிறதா என்பதை மத்திய, மாநில அரசுகள் கண்டறிய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய தமிழகம் கட்சி தற்போது பாரதிய ஜனதா கூட்டணியில் இருக்கிறது. இந்த நிலையில் பெரியார் சிலை விவகாரத்தில் அவர் அண்ணாமலைக்கு எதிரான கருத்து கூறி இருப்பதும், ஜனவரியில் புதிய அரசியல் முடிவு எடுக்கப்படும் என கூறி இருப்பதும் அவர் கூட்டணியில் இருந்து விலகும் முடிவில் உள்ளாரா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

Tags

Next Story