மணிப்பூரில் பாரத மாதா கொலை: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி ஆவேசம்

மணிப்பூரில் பாரத மாதா கொலை: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி ஆவேசம்
X

நாடாளுமன்ற மக்களவையில் இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. ஆவேசமாக பேசினார்.

மணிப்பூரில் பாரத மாதாவை பா.ஜ.க. கொலை செய்து விட்டது என நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி ஆவேசமாக பேசினார்.

மணிப்பூர் விவகாரத்தில் பாரதிய ஜனதா அரசு பாரதமாதாவை கொலை செய்துவிட்டது என்று ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் மிக ஆவேசமாக பேசினார்.

மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் இனக்கலவரம் தீர்க்க முடியாத ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது. மணிப்பூர் மாநில பிரச்சனை பற்றி நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி நேரடியாக பதில் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டம் தொடங்கிய நாளிலிருந்து கோரிக்கை வைத்து விவாதம் நடத்தி வருகிறார்கள்.

இதன் காரணமாக எதிர்க்கட்சிகளின் அமளியால் பாராளுமன்றம் முழுமையாக நடைபெறாமல் பல நாட்கள் முடங்கியது. எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்து வருகிறார். எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்துவதற்கு நேரமும் ஒதுக்கி கொடுத்தார். ஆனால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பிரதமர் மோடி பதிலளிக்க கோரி அவர்கள் தொடர்ந்து அமளியில் இறங்கினர்.


இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. ஒருவர் பி.ஜே.பி. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன் மீது ஆகஸ்ட் 8-ம் தேதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்து இருந்தார்.

அதன்படி எட்டாம் தேதி நம்பிக்கை இல்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் மீது நடைபெற்று வரும் விவாதத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆவேசமாக பேசி வருகிறார்கள். இதன் காரணமாக நாடாளுமன்றம் கடந்த எட்டாம் தேதியிலிருந்து அமளிப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவின் காரணமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால் அவர் நாடாளுமன்ற கூட்டத்தில் நேற்று முதல்முறையாக கலந்து கொண்டார். இன்று இரண்டாவது நாளாக அவர் கலந்து கொண்ட போது மணிப்பூர் விவகாரம் பற்றி மிக ஆவேசமாக பேசினார்.

மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசிய ராகுல் காந்தி பா.ஜ.க. அரசு மணிப்பூரில் பாரதமாதாவை கொலை செய்து விட்டது என்றார். அவர் இப்படி பேசியதும் அதற்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் ஒட்டு மொத்தமாக எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.


இது ஒருபுறம் இருக்க ராகுல் காந்தியின் இந்த கடுமையான பேச்சுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலடி கொடுத்தார். காங்கிரஸ் ஆட்சியில் தான் ஊழல் பெருகியது. குடும்ப அரசியலுக்கு பா.ஜ.க. முடிவு கட்டி இருக்கிறது என்றார். இப்படி பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்களும் இன்றைய விவாதத்தில் காரசாரமாக மோதிக்கொண்டனர்.

விவாதம் முடிந்து ராகுல் காந்தி வெளியேறும் போது பா.ஜ.க. பெண் எம்.பி.க்களை பார்த்து பிளையிங் கிஸ் கொடுத்து விட்டு சென்றதாக பா.ஜ.க. எம்பிக்கள் சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் முறையிட்டனர். மத்திய மந்திரி ஸ்மிருதி ராணி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தியை தாக்கி பேசினார். அதற்கு சில எம்.பி.க்கள் விளக்கம் அளித்தனர். இதுபோன்ற சம்பவங்களால் இன்று பாராளுமன்றம் கடும் அமளிக்கிடையே முடிவடைந்தது.

Tags

Next Story