வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை: வரும் 30 -ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற நவம்பர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

Update: 2022-11-15 00:53 GMT

பைல் படம்

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்ட மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் பதிவு செய்து எந்தவித வேலை வாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலையில்லா இளைஞர்கள் உதவித்தொகை பெற நவம்பர் 30ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் யோகலட்சுமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி, மேல்நிலைக் கல்வி தேர்ச்சி, பட்டமளிப்பு கல்வி தகுதி தேர்ச்சி, பெற்று வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ச்சியாக பதிவினை புதுப்பித்து வருபவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவர்களாக இருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களாக இருப்பவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் 45 வயதிற்கும் மிகாமலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், இதர வகுப்பினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒருமுறை மட்டுமே உதவி தொகை வழங்கப்படும். பத்தாம் வகுப்பு தவறியவர் மாதம் ரூ.200, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300, மேல்நிலை கல்வி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.400, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வழங்கப்படும்.

அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவ, மாணவியருக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது. அதேபோல் மாற்றுத்திறனாளிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.600, மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750, பட்டதாரிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட தகுதி உள்ளவர்கள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெறப்பட்ட விண்ணப்பித்திலோ அல்லது வேலை வாய்ப்புதுறை இணையதளத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்திலோ அல்லது ஜெராக்ஸ் நகல் எடுத்து விண்ணப்ப படிவத்திலோ பூர்த்தி செய்து ஆர்ஐஆல் அல்லது உரிய அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்ட சான்றும், தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நவம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஏற்கனவே உதவித் தொகை பெற்று வருபவர்கள் தாங்கள் தொடர்ந்து உதவித் தொகை பெற வேலையில் இல்லை என்பதற்கான சுய உறுதிமொழி ஆவணத்தை நேரில் அளிக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள் சுய உறுதிமொழி ஆவணம் அளிக்க தேவை இல்லை. இவ்வாறு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் யோகலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News