அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்பு வணிக வளாக வழக்கு, சிறப்பு அமர்வுக்கு மாற்றம்

அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்பு வணிக வளாக வழக்கு, சிறப்பு அமர்வுக்கு அமா்வுக்கு மாற்றி, சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Update: 2024-05-01 01:40 GMT

அருணாச்சலேஸ்வரர் கோயில் 

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் கிழக்கு கோபுரம் முன், வணிக வளாகம் கட்ட ஒப்புதல் வழங்கிய அரசாணைக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் கோயில் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரா் கோயிலின் கிழக்கு கோபுரம் முன் ரூ. 6 கோடி செலவில் வணிக வளாகம் கட்ட அறநிலையத் துறை அனுமதி வழங்கி, 2023-ஆம் ஆண்டு செப். 14ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி கோயில் வழிபாட்டாளா்கள் சங்கத்தின் தலைவா் டி.ஆா்.ரமேஷ் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: புராதன கட்டடமான ராஜகோபுரத்தின் முன் வணிக வளாகம் கட்டுவது, கோயிலின் விழாக்களுக்கு இடையூறாக அமையும். விழாக் காலங்களில் பக்தா்கள் பங்கேற்க தடையாக இருக்கும். கோயில்களில் கட்டுமானங்கள் மேற்கொள்வது தொடா்பாக, மாநில அளவிலான குழுவின் ஒப்புதல் பெறப்படவில்லை. வணிக வளாகம் கட்ட கோயில் நிதி பயன்படுத்தப்படவுள்ளது. எனவே, வணிக வளாகம் கட்ட அனுமதி வழங்கிய அரசாணைக்குத் தடை விதித்து, அதை ரத்து செய்ய வேண்டும். கோயில் நிதியை மீண்டும் கோயில் வசம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுா்வாலா மற்றும் நீதிபதி சந்திரசேகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத் துறை தரப்பில், ஏற்கெனவே இதே விவகாரம் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கோயில்கள் தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமா்வில் விசாரணையில் உள்ளதாகவும் எந்தக் கட்டுமானமும் மேற்கொள்ளப்படாது எனவும் அறநிலையத் துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஒரே விவகாரத்துக்கு எதற்கு இத்தனை வழக்குகள் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை கோயில்கள் தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமா்வுக்கு மாற்றி, ஜூலை 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

Similar News