நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு: திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 பறக்கும் படை

திருவண்ணாமலை மாவட்டத்தில் குரூப்2 தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-05-20 11:57 GMT

தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

தமிழகத்தில் குரூப் -2 தேர்வு நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற உள்ள தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி, கீழ்பென்னாத்தூர், போளுர் ஆகிய தாலுகாக்களில் 114 இடங்களில் தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வில் 33 ஆயிரத்து 588 விண்ணப்பதாரர்கள் எழுத உள்ளனர்.

தேர்வின்போது முறைகேடு நடைபெறாமல் இருப்பதை கண்காணிக்க ஏதுவாக துணை ஆட்சியர் நிலையில் 14 பறக்கும் படைகளும், 228 ஆய்வு அலுவலர்களும், 27 மொபைல் யூனிட் அலுவலர்கள் மற்றும் 114 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தேர்வு பணிகள் அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்ய மாவட்டம் முழுவதும் 118 வீடியோ கிராபர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தேர்வு எழுத செல்லும் விண்ணப்பதாரர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றது. மேலும் முதன்மை கண்காணிப்பாளர்களுக்கு தேர்வு நடத்தும் நடைமுறைப்ப ற்றி அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

தேர்வு எழுத செல்லும் விண்ணப்பதாரர்கள் கைபேசி, கைக்கடிகாரம், கால்குலேட்டர் உள்ளிட்ட எந்தவொரு மின்னனு சாதனங்களும் எடுத்து செல்ல தேர்வாணையத்தால் தடைசெய்யப்பட்டு உள்ளது என்றார்.

இக்கூட்டத்தில்  மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார் செயலாளர் வெங்கடேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பிரிவு அலுவலர் சிவன், வருவாய் கோட்டாட்சியர்கள் வெற்றிவேல், கவிதா, விஜயராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News