திருவண்ணாமலையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் உண்ணாவிரதம்

திருவண்ணாமலையில் கோரிக்ககைகளை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

Update: 2023-03-19 12:02 GMT

திருவண்ணாமலையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்.

திருவண்ணாமலையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி  திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகில் உள்ள டவுன் ஹால் பள்ளி வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் அசோகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேட்டு கோரிக்கையை விளக்கி பேசினார். மாவட்ட துணை செயலாளர் சண்முகம் வரவேற்றார். மாநில துணை தலைவர் வேலு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

இதில் பங்களிப்பு ஓய்வூதியத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 6-வது மற்றும் 7-வது மத்திய ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை முற்றிலும் களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும், இ.எம்.ஐ.எஸ். வலைதளத்தில் ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்யப்படுவதை முற்றிலுமாக நிறுத்திட வேண்டும். மாவட்ட கல்வி அலுவலகங்கள் (தொடக்கக்கல்வி) மற்றும் வட்டார கல்வி அலுவலகங்களில் ஏற்பட்டு உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் வேலூர் மாவட்ட முன்னாள் தலைவர் சுதாகரன், மாவட்ட துணை செயலாளர் சரவணன், இயக்க புரவலர் இமானுவேல், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பிச்சாண்டி, மாலதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

மாவட்ட செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் தண்டராம்பட்டை அடுத்த சாத்தனூர் கிராமத்தில்  நடைபெற்றது. மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஏழுமலை முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக மாநில பொது செயலாளர் சுரேஷ் கலந்து கொண்டு பேசினார். வட்ட தலைவர் ஏழுமலை வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்புவித்தலை மீண்டும் அமல்படுத்த வேண்டும், பட்டப்படிப்பு ஊக்கத்தொகை மீண்டும் வழங்க வேண்டும் ஆகியவற்றை நிறைவேற்றக்கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் திருவண்ணாமலை கோட்ட செயலாளர் பழனி, தண்டராம்பட்டு வட்ட கிளை தலைவர் ஏழுமலை, செயலாளர் சிவலிங்கம், அனைத்து வட்ட கிளை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தண்டராம்பட்டு வட்ட பொருளாளர் அழகேசன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News