திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா

திருவண்ணாமலையில் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் 73 ஆம் ஆண்டு மகா ஆராதனை விழா ரமணாஸ்ரமத்தில் நடை பெற்றது

Update: 2023-04-18 13:26 GMT

சிறப்பு அலங்காரத்தில் ரமண மகரிஷி.

பகவான் ரமண மகரிஷிகளின் 73 ஆவது ஆராதனை திருவண்ணாமலையில் ஸ்ரீ ரமணாச்ரமத்தில் இன்று (18-4-2023) விமரிசையாக நடைபெற்றது.

திருவண்ணாமலை... நினைத்தாலே முக்தி தரும் தவபூமி என்பார்கள். இங்கு வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற மகான்கள் ஏராளம். அப்படிப்பட்ட புண்ணிய பூமியில் இரு மகான்கள் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தனர். அவர்கள் இருவரும் ஒருவரைக் குறித்து ஒருவர் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் சேஷாத்திரி சுவாமிகள்.


திருவண்ணாமலையே இனி தன் வாசஸ்தலம் என்று பகவான் ரமண மகரிஷி முடிவுசெய்துகொண்டார். திருவண்ணாமலையின் அருட் தீபமாகிப் பிரகாசித்தார். முதலில் அருணாசலேசுவரர் ஆலயத்தில் தியானம் செய்தார்.அங்குள்ள பாதாள லிங்கத்தில் பல மாதங்களாக தியானத்தில் இருந்தார்.

மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் இவரை அடையாளம் கண்டு இதோ ஒரு பெரிய மகான் இருக்கிறார் , பாருங்கள் என்று பொதுமக்களுக்கு ரமணரை அடையாளம் காட்டினார்

பின்னர் விருபாக்ஷி குகை, கந்தாச்ரமம், பாலாக்கொத்து எனப் பல இடங்களில் வாசம் செய்து  இறுதியில் அருணாசலேசுவரர் மலை அடிவாரத்தில் தனது தியானத்தை மேற்கொண்டார். அந்த இடமே தற்போது ரமணர் ஆசிரமமாக உள்ளது.

தேனிருக்கும் இடம் நோக்கி வண்டுகள் படையெடுக்கும் என்பதுபோல ரமணரை நோக்கி பக்தர்கள் வரத் தொடங்கினர். அவர்களுக்கு அருள்வழி காட்டியதோடு வாழும் முறையையும் உபதேசித்தார் ஸ்ரீ ரமணர். ‘எப்போதும் உண்மையே பேசுதல், கடினமான உழைப்பிற்கு பின்னே ஓய்வு. வெற்றி தோல்விகளைச் சமமாக பாவித்தல். பிறரை தாழ்வாக எண்ணாதிருப்பது, உணவையும் வீணாக்காமல் இருப்பது’ போன்ற நடைமுறை வாழ்வியலுக்கான உபதேசங்கள் அவரிடமிருந்து பிறந்தன.

திருவண்ணாமலையில் தங்கி, பல லட்சம்பக்தர்களின் வாழ்வில் ஆன்மிக விளக்கை ஏற்றிவைத்த ஸ்ரீ ரமண மகரிஷி, 1950-ம் ஆண்டு சித்திரை மாதம் இயற்கையோடு கலந்தார்.

பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் 73 ஆம் ஆண்டு மகா ஆராதனை விழா இன்று திருவண்ணாமலையில் உள்ள ரமணாஸ்ரமத்தில் நடை பெற்றது. பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ பகவான் சந்நிதியில் அதிகாலை மங்கள இசையுடன் ஆராதனை துவங்கியது. பின்னர் மஹன்யாச ருத்ர ஜபம், சிறப்புப் பாராயணம், அபிஷேக அலங்காரங்கள் சிறப்பாக நடைபெற்றது.

பக்தர்கள் தங்களுக்குப் பிரியமான பகவானுக்குப் பூமாலைகளையும் பாமாலைகளையும் காணிக்கையாக்கி மகிழ்ந்தனர். சுமார் 12 மணி அளவில் ஆரத்தியுடன் பகவானது 73 ஆவது ஆராதனை இனிதே நிறைவுற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீபகவானது அருளைப் பெற்றனர். கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு விருந்து பிரசாதமாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில்  இசைஞானி இளையராஜா தனது மகன் இசை அமைப்பாளர் கார்த்திக் ராஜாவுடன்   கலந்து கொண்டு பகவான் ரமண மகரிஷி பற்றிய பாடலை ஆர்மோனியம் வாசித்து பாடினார் . ஏராளமான பக்தர்கள் பாடல்களை ரசித்து ஆனந்தம் அடைந்தனர்.

Tags:    

Similar News