தையல் கலை தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்

திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தையல் தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-22 06:24 GMT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தையல் தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட தையல் கலை தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. பொது செயலாளர் வீரபத்திரன் தலைமை தாங்கினார்.

இதில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை தைத்து கொடுத்து வரும் திருவண்ணாமலை தையல் மகளிர் மேம்பாட்டு குடிசை கூட்டுறவு சங்கம் மற்றும் வந்தவாசி அன்னை சத்யா மகளிர் தையல் தொழிலாளர் கூட்டுறவு சங்கம் ஆகியவற்றுக்கு கடந்த 10 ஆண்டுகளாக புதிய உறுப்பினர் சோக்கை இல்லை.

எனவே அதில் பெண் தையல் தொழிலாளர்களை உறுப்பினர்களாக சேர்த்திட வேண்டும். சமூக நலத்துறையில் இலவச தையல் எந்திரம் கேட்டு விண்ணப்பித்து உள்ள தகுதியானவர்கள் அனைவருக்கும் தையல் எந்திரம் வழங்கிட வேண்டும். தையல் கடைகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிட வேண்டும். நலவாாரியத்தில் பதிவு செய்து 60 வயது பூர்த்தியானவர்களுக்கு ஓய்வூதியம் மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் தையல் கலை தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கைளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Tags:    

Similar News