திருவண்ணாமலை தீபம் காண மலை ஏறி சென்றவர், மூச்சுத் திணறி உயிரிழந்தார்

திருவண்ணாமலையில் மகாதீபத்தை பார்ப்பதற்கு மலை ஏறி சென்றவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

Update: 2021-11-26 03:05 GMT

தீபம் காண சென்று மூச்சு திணறி உயிரிழந்தவர்

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை மீது, 19ம் தேதி மஹா தீபம் ஏற்றப்பட்டது.  தொடர்ந்து 11 நாட்கள் எரியும் தீபத்தைக் காண, மலை மீது ஏறி செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஆனாலும், சில பக்தர்கள் தடையை மீறி மலை மீது ஏறி செல்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த கெங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த துரை, 32, என்பவர், நேற்று  மாலை தனியாக மலை மீது ஏறி மஹா தீபம் காண சென்றார்.செல்லும் வழியில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சுருண்டு விழுந்து இறந்தார். அப்போது அங்கு மலையேற சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

போலீசார், தீயணைப்புத்துறையினர், வனத்துறையினர் மலை ஏறி சென்று மலையின் உச்சியில் உள்ள 7 சுனை என்ற பகுதியில் இறந்து கிடந்த துரையின் பிணத்தை மீட்டு இன்று அதிகாலை 3 மணியளவில் மலை அடிவாரத்துக்கு கொண்டு வந்தனர்.  அவரின் உடலை போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் இறந்த துரை ஆரணியில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தவர் என்பதும். இன்னும் திருமணம் ஆகவில்லை எனத் தெரிய வந்தது. திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News