அம்மணி அம்மன் மடத்தை மீட்ட அரசுக்கு நகர நல அமைப்புகள் நன்றி

ஆக்கிரமிப்புகளை அகற்றி அம்மணிஅம்மன் மடத்தை மீட்ட அரசுக்கு திருவண்ணாமலை நகர நல அமைப்புகள் சார்பில் நன்றி தெரிவித்தனர்

Update: 2023-03-21 02:19 GMT

அம்மணி அம்மன் மடத்தை மீட்ட அரசுக்கு நன்றி தெரிவித்த நகர நல அமைப்புகள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் வடக்கு கோபுர அருகில் உள்ள அம்மணி அம்மன் மடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து மடத்தின் இடத்தில் கட்டி இருந்த வீட்டை இந்து சமய அறநிலையத்துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்  கடந்த 18-ம் தேதி அகற்றினர்.

தொடர்ந்து அன்று மாலையில் திடீரென அம்மணி அம்மன் மடமும் இடிக்கப்பட்டது. இதற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மடம் இடிக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினமும் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட மடத்தை சுற்றி கோவில் நிர்வாகம் சார்பில் தகர சீட்டினால் வேலி போன்று அமைக்கப்பட்டு அடைக்கப்பட்டது.

தொடர்ந்து நேற்று மாலை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முக்கிய வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள், ஆன்மீக அமைப்புகள், தமிழ் மன்றங்கள், சேவை சங்கங்கள் ஒன்றிணைந்து அம்மணி அம்மன் மடம் அருகே செய்தியாளர்களை சந்தித்தனர். அப்பொழுது அவர்கள் அனைவரின் சார்பாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் தனுசு கூறியதாவது

அருணாசலேஸ்வரர் கோவிலின் அருகில் அம்மணி அம்மன் மடம் உள்ளது. இந்த மடத்தில் உள்ள ஆண்டவனுக்கு இதுவரை பூஜைகள் நடந்தது இல்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பு மடம் உள்ள இடம் கோவிலுக்கு சொந்தமானது என்று கோவில் நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 3 நாட்களுக்கு முன்பாக நீதிமன்ற உத்தரவின்படி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு அவர்கள் திருவண்ணாமலை நகருக்கு வருகின்ற பக்தர்களுக்கு பல வசதிகளை செய்து தர வேண்டும் என்ற எண்ணத்தில் பல நல்ல திட்டங்களை இங்கு அறிவித்திருக்கிறார். அவர் மட்டும் இல்லாமல் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரையும் அழைத்து வந்து கிரிவலப் பாதையில் பக்தர்கள் நடந்து செல்லவும் அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் தரிசனம் செய்யவும் ஏற்பாடுகள் செய்து வருகிறார்.

அமைச்சர் செய்கின்ற அனைத்து பணிகளுக்கும் இங்கே வாழ்கின்ற பொதுமக்கள், வியாபாரிகள், ஆன்மீகப் பெருமக்கள், சேவை சங்கங்கள், தமிழ் மன்றங்கள், அனைத்தும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என நாங்கள் உறுதியளிக்கின்றோம்.

மேலும் இந்த அம்மணி அம்மன் மடத்தில் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் எந்த மாதிரி வசதிகள் செய்யலாம் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் பொதுமக்களிடையே கேட்டு உள்ளார். இந்த இடத்தில் பக்தர்களுக்கு தேவையான தங்கும் விடுதி, தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் அமரும் இடம் அமைக்க வேண்டும் என்று  கூறினார்.

இந்நிகழ்ச்சியின் போது அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் சண்முகம், மாவட்ட அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் மண்ணுலிங்கம், ஓட்டல் அதிபர் ஆகாஷ் முத்துகிருஷ்ணன், திருக்குறள் விழா குழு தலைவர் கண்ணன், செயலாளர் டிவிஎஸ் ராஜாராம், அருணகிரிநாதர் மணிமண்டப குழு செயலாளர் அமரேசன்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News