திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் ஒருவரும் ஆரணியில் மூவரும் வேட்புமனு தாக்கல்
மக்களவைத் தேர்தல் வேட்புமனு தாக்கலின் 3-ஆவது நாளில் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு மேலும் ஒருவரும், ஆரணி தொகுதிக்கு மூவரும் வேட்புமனு தாக்கல் செய்தனா்.
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடக்கிறது. அதன்படி, தமிழகத்தில் அடுத்த மாதம் 19ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அதையொட்டி, வேட்புமனு தாக்கல் 20 ஆம் தேதி தொடங்கி வரும் 27ம் தேதி வரை நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து, வரும் 28ம் தேதி வேட்புமனு பரிசீலனையும், 30ம் தேதி மாலை 3 மணி வரை மனுக்கள் வாபஸ் பெற அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது. 30ம் தேதி மாலை 5 மணிக்கு, வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.
திருவண்ணாமலை தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலராக கலெக்டர் பாஸ்கரபாண்டியனும், ஆரணி தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலராக டிஆர்ஓ பிரியதர்ஷினியும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட 12 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா ஒரு உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேட்புமனு தாக்கல்
வேட்புமனு தாக்கலின் 3-ஆவது நாளான நேற்று வெள்ளிக்கிழமை திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட திருவண்ணாமலை நகரைச் சேர்ந்த எஸ்.விஜய்குமாா் , மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பாஸ்கர பாண்டியனிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா். ஆரணி மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட போளூரைச் சேர்ந்த முகமது சித்திக் , ஆரணி மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான பிரியதா்ஷினியிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா்.
ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா்கள் கட்சி நிா்வாகியான விழுப்புரம் நகரைச் சேர்ந்த பி.நாகராஜன், ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக, கோட்டாட்சியா் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலா் பாலசுப்பிரமணியனிடம் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா். இதேபோல, ஆரணி காந்திநகா் பகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான நடராஜன் மகன் பாபு , சுயேச்சையாக போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தாா்.
இதுவரை திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் போட்டியிட 2 சுயேச்சை வேட்பாளா்களும், ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிட 3 சுயேச்சை வேட்பாளா்களும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.