நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பள்ளிப்பட்டு பேரூராட்சி

தேர்தல் செலவினங்களுக்கு நிதியின்றி நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பள்ளிப்பட்டு பேரூராட்சி

Update: 2022-01-28 05:15 GMT

பள்ளிப்பட்டு பேரூராட்சி அலுவலகம் 

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிப்பட்டு பேரூராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வட்ட தலைநகரமான பள்ளிப்பட்டில் பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றது. மேலும் நகர மக்கள் பெரும்பாலானோர் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேரூராட்சிக்கு போதுமான வருவாயின்றி வளர்ச்சிப் பணிகள் முடங்கியுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக பேரூராட்சியில் பணியாற்றும் 50க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு மாதாந்திர ஊதியம் வழங்கவும் நிதி பற்றாக்குறை நிலவுகிறது. அரசு வேலையை நம்பி குடும்ப வாழ்வாதாரமாக இருக்கும் ஊழியர்கள் தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை அடைந்துள்ளனர்.

நிதி நெருக்கடியால் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் பணியாற்ற செயல் அலுவலர்கள் ஆர்வம் காட்டாமலும் பணியில் சேர்ந்தவர் ஓரிரு மாதங்களில் பணி மாறுதல் பெற்று சென்று விடுகின்றனர்‌ இதனால், பேரூராட்சி வளர்ச்சி கடுமையாக முடங்கி பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது.

இந்நிலையில், நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கவுள்ள நிலையில் பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வந்த ஹரிஹர கார்த்திகேயன் உடல்நிலை காரணம் காட்டி மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார்‌. தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் பேருராட்சியில் நிரந்தரமாக செயல் அலுவலர் இல்லாத நிலையில் பொதட்டூர்பேட்டையில் பணியாற்றி வரும் பிரகாசுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணிகள் விரைவாக மேற்கொள்ள நிதி தேவைப்படுவதால் பேரூராட்சியில் நிலவும் நிதி நெருக்கடி காரணத்தால் தேர்தலை நடத்துவது எவ்வாறு என்று தெரியாமல் பேரூராட்சி அலுவலர்கள் திணறுகின்றனர். ஏற்கனவே பெற்றுள்ள கடன் தொகை திருப்பி வழங்கப்படாததால் மீண்டும் பொருட்கள் வாங்க முடியாத நிலை இருப்பதாகவும் இதன் காரணமாகவே இங்கு பணியாற்ற அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து தேர்தல் பணிகள் தேக்கமின்றி நடைபெற மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிப்பட்டு பேரூராட்சி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News