பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்கும் விவகாரம்: கோட்டாட்சியரின் பேச்சு வார்தையில் வாக்குவாதம்

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியில் 10 -க்கும் மேற்பட்ட கிராமமக்கள் மீன்பிடித்து வருகின்றனர்

Update: 2022-08-02 09:15 GMT

பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ஒருதரப்புடன் மற்றொரு தரப்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டே கூட்டத்தில் இருந்து வெளியேறி கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஏரியில் ஆண்டிக்குப்பம், நடுவூர் மாதாக்குப்பம், கோட்டைக்குப்பம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் ஏரியில் மட்டுமே மீன்பிடி தொழில் செய்யும் நிலையில் கடலில் மீன் பிடிக்க செல்வது கிடையாது.

இதே போல கூனங்குப்பம் மீனவர்கள் கடலில் மீன்பிடி தொழில் செய்து வரும் நிலையில் இவர்கள் ஏரியில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி இறால், நண்டு ஆகியவற்றை பிடிப்பதால் மற்றொரு தரப்பினர் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் காயத்ரி தலைமையில் இருதரப்பினருடன் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இருதரப்பு கருத்துக்களை கேட்ட கோட்டாட்சியர் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக மீனவர்களிடம் அப்போது தெரிவித்தார். பிரச்னைக்கு தீர்வு காணப்படாததால் ஒருதரப்புடன் மற்றொரு தரப்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டே கூட்டத்தில் இருந்து வெளியேறி கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருதரப்பிற்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவானதால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி தனித்தனியே அனுப்பி வைத்தனர். அமைதி பேச்சுவார்த்தைக்கு வந்த மீனவர்கள் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதால் பரபரப்பு நிலவியது.


Tags:    

Similar News