பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் 2-வது நாளாக தொடர் உண்ணாவிரதம்

பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் திருவாரூரில் இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2022-04-07 13:31 GMT
திருவாரூரில்பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

கொரோனா பேரிடர் காலத்தில் ஆபத்தான சூழ்நிலையில் பணிபுரிந்த செவிலியர்கள் மற்றும் ஈ.சி.ஜி. டெக்னீஷியன்கள் கடந்த மாதம் 31 ஆம் தேதியோடு தமிழக அரசு பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது .

இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்த செவிலியர்கள் மற்றும் ஈ.சி.ஜி. டெக்னீசியன்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக செவிலியர் சங்கத்தின் சார்பில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரத போராட்டம் இரவும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இதில் கலந்துகொண்ட செவிலியர்களில் புவனேஸ்வரி மற்றும் சந்தியா ஆகியோர் ஒன்றன் பின் ஒன்றாக மயங்கி விழுந்துள்ளனர். உடனடியாக இவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் இன்று 2-வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் 80க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News